மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி ஆவார். மதுரையில் பழிக்குப் பழியாகக் கடந்த 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்துள்ளன. இதில் வெள்ளைக்காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வகையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதன் காரணமாக வெள்ளைக்காளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ரவுடி வெள்ளைக்காளி ஆஜர்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று போலீசார் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து, பாண்டி ஆகியோர் காயமடைந்தனர். இதனையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் போலீஸ் வாகனத்தில் இருந்த ரவுடி வெள்ளைக் காளிக்கு நல்வாய்ப்பாகக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும், அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் போலீசார் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வெள்ளைக்காளியை போலீசாரிடம் இருந்து தப்பிக்க வைத்து அவரை மீட்டுச் செல்ல முயன்றாக கூறப்படுகிறது. போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டத்தில் காவலர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/24/per-police-van-incident-2026-01-24-17-47-45.jpg)
இந்நிலையில் இந்த சமபவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/24/mks-eps-mic-2026-01-24-17-46-59.jpg)