திருச்சியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி கால நிகழ்வுகளை கலகலப்பாக பகிர்ந்து கொண்டார்.

Advertisment

அவருடைய பேச்சில், ''மேடையில் இருப்பவர்கள் எல்லாம் பட்டம் பயின்றவர்கள். நானெல்லாம் காலேஜுக்கு என்ற என்டர் ஆனதோட சரி காலேஜுக்கு போகவில்லை. அதிகம் நிறைய படித்தவர்கள் மேடையில் இருக்கிறார்கள்.  பள்ளிக்கு செல்லும் பொழுது எந்த நாளும் புத்தகத்தை படித்து நான் பரிட்சை எழுதியதே கிடையாது. வாத்தியார் சொல்லியதை கேட்டு அப்படியே செய்வதுதான் என்னுடைய செயல். இருந்தாலும் நான் எல்லாவற்றிலும் பாஸ் ஆகி விட்டேன் பெயில் ஆகவில்லை. ஆசிரியர்கள் என்று சொன்னால் அரசுப் பள்ளியில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.

பெரிய மருத்துவமனைகள் இருக்கிறது. கார்ப்பரேட் மருத்துவமனைகள் எல்லாம் இப்பொழுது வந்திருக்கிறது. அதை காட்டிலும் நம்முடைய அரசு மருத்துவமனையில் தான் சிறப்பான மருத்துவர்கள் இருக்கிறார்கள். பள்ளியைப் பார்த்தாலும் உங்களுக்கு தெரியும் அமெரிக்கன் ஸ்கூல் என்று சொல்கிறார்கள், இன்டர்நேஷனல் ஸ்கூல் என்று சொல்கிறார்கள், சிபிஎஸ்இ ஸ்கூல் என்று சொல்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விட நமது அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் தான் அதிகமான மதிப்பெண்ணை பெறுகிறார்கள். அதற்கு ஆசிரியர்கள் தான் காரணம்.

காலையில் எழுந்தவுடன் வேறு எந்த சிந்தனையும் இருக்காது. அரசு அலுவலர்களுக்கு குறிப்பாக ஆசிரியர்களுக்கு. கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் உடனடியாக புறப்பட்டு பள்ளிக்கூடத்தில் போய் மாணவர்களை பார்த்தால் தான் அவர்களுக்கு திருப்தி வரும் .அந்த வகையில் ஒரு உற்சாகமாக இந்த பணியை செய்து செய்து வருகிறீர்கள். உங்களை பாராட்டுவது 100% தகும்.  கணக்கில் நூறு வாங்கிவிடலாம், கெமிஸ்ட்ரியில் நூறு வாங்கிவிடலாம், பிசிக்ஸில்  100 வாங்கிவிடலாம். தமிழில் நூறு வாங்குவது என்பது மிக மிக கடினமான விஷயம். மேல்நிலைப் பள்ளியில் 134 பேர் வாங்கி இருக்கிறார்கள். இவை அனைத்து பெருமையும் ஆசிரியர்களுக்கு தான் தகும். ஒரு க், ங், ச் விட்டாலே மார்க் குறைத்து விடுவார்கள். அது ஆசிரியர் பெருமக்களை தான் சாரும். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக கிட்டத்தட்ட 2000 பேர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து பாராட்டு நடத்துவது பெருமைக்குரியது'' என்றார்.