'கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும்' என தற்போது செங்கோட்டையன் உயர்த்தி இருக்கும் குரல் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. தொடர்ந்து ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லி கிளம்பிய செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Advertisment

இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவை வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஹரித்துவார் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றேன். ஆனால் டெல்லி சென்ற உடனே அமித்ஷாவை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் மூலமாக உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் இருவரையும் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துக்கள் அங்கே பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இயக்கம் வலிமைபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை நாங்கள் அவரிடத்தில் எடுத்துச் சொன்னோம். ஆகவே அந்த கருத்துக்கள் அடிப்படையில் பல்வேறு வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்திக்கின்ற பொழுது ரயில்வே துறை அமைச்சர் வருகை தந்தார். அவரிடத்தில் ஈரோட்டில் இருந்து புறப்படுகின்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன்பெல்லாம் பத்து மணியளவில் புறப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே செல்வதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் செல்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. காலை 3 மணியளவில் சென்னை சென்று விடுகிறது. அந்த நேரத்தை நீங்கள் மாற்றினால் மிக உதவியாக இருக்கும் என்று சொன்னேன். அப்பொழுது அவர் பரிசீலிப்பதாகச்  சொன்னார்கள். இயக்கம் வலிமை பெறுவதற்கு உங்கள் அனைவருக்கும் ஒத்துழைப்போடு அந்த பணிகளைத் தொடர்ந்து செய்வேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.