'I have traveled 2000 kilometers for social justice' - Chief Minister M.K. Stalin's speech at Rahul's rally Photograph: (dmk)
வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் நடைபெற்று வரும் பேரணி நிகழ்வில் பங்கேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், ''பீகாரினுடைய இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு வணக்கம். உங்களையெல்லாம் பார்ப்பதற்காக தான் 2000 கிலோ மீட்டர் கடந்து இங்கே வந்திருக்கிறேன். சமூக நீதி, மதச்சார்பின்மைக்காக தான் 2000 கிலோ மீட்டர் கடந்து இங்கே வந்திருக்கிறேன். பீகார் என்றாலே மரியாதைக்குரிய லாலு பிரசாத் நினைவுக்கு வருவார். சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையின் அடையாளம் அவர். கலைஞரும் லாலுவும் மிக நெருக்கமான நண்பர்கள்.
எத்தனையோ மிரட்டல் வந்தாலும் பாஜகவிற்கு பயப்படாமல் அரசியல் செய்ததால் கலைஞரும் லாலு பிரசாத்தும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து என போர்க்குரல் எழுப்பியுள்ளது பீகார். ராகுல், தேஜஸ்வி யாதவ் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது. ஜனநாயகத்தை காக்க நீங்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த வெற்றியை தடுக்கப் பார்க்கிறார்கள். நியாயமாக முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால் பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்று மக்களான உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றி விட்டார்கள். 65 லட்சம் பீகார் மகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. சொந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை விட பயங்கரவாதம் இருக்க முடியுமா? எல்லா அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும் அவர்களை அட்ரஸ் இல்லாதவர்கள் போல ஆக்குவதும், அழித்து ஒழிப்பதும் தானே பாஜகவின் வேலை.
சகோதரர்கள் ராகுலும், தேஜஸ்வியும் பெறப்போகும் வெற்றியை தடுக்க முடியாது. பாஜக கொள்ளைப்புறம் வழியாக இந்த வேலையை பார்க்கிறது. இதற்கு எதிராக என்னுடைய சகோதரர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தை வாழ்த்துவதற்காக தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால் முறையான ஒரு பதில்கூட சொல்ல முடியவில்லை. ஆனால் ராகுல் காந்தி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்லுகிறார்.
இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும் கண்களிலும் எப்பொழுதும் பயம் இருக்காது. ராகுல் காந்தியை பொறுத்தவரை சும்மா அரசியலுக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த கவனத்தோடு பேசுகின்றவர்'' என்றார்.