தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் அவரின் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தற்போது இன்று (27/07/2025) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பியுள்ளார். வழிநெடுக கட்சித் தொண்டர்கள் அவரை வரவேற்று வருகின்றனர். முதல்வரின் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த குறிப்பில் முதல்வர் சீரான உடல் நலத்தோடு இருப்பதாகவும், வீட்டிற்கு சென்ற பின்னரும் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'நலம்பெற்று வீடு திரும்பினேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்! உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்!' என தெரிவித்துள்ளார்.