அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த மருது அழகுராஜ் திமுகவில் இணைந்துள்ளார்.

Advertisment

திமுகவில் இணைந்ததற்கு பிறகு  சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''எடப்பாடியின் அபகரிப்பு அரசியலில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் இரட்டிப்பு பொருளியல் வளர்ச்சியையும், திமுகவின் அளப்பரிய தொண்டர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையில் அபகரிப்பு அரசியலை விட்டு அரவணைப்பு அரசியலை நோக்கி நான் அமர்ந்திருக்கிறேன். ஏறத்தாழ 20 வருடங்கள் அதிமுகவிற்கு எனது தமிழையும், எனது எழுத்தையும், எனது பேச்சையும் ஒப்படைத்து உழைத்தவன். எடப்பாடி அபகரிப்பு அரசியலை, ஆக்கிரமிப்பு அரசியலை நான் ஜனநாயகத்திற்கு புறம்பானது என கண்டித்த காரணத்தினால் அங்கிருந்து விலக்கப்பட்டேன்.

ஜெயலலிதாவின் உரையாசிரியராக, அவருடைய நமது எம்ஜிஆர் இதழின் ஆசிரியராக தொடர்ந்து நமது அம்மா இதழின் ஆசிரியராக ஏறத்தாழ 20 வருடங்கள் உழைத்திருக்கிறேன். நான் எந்த அதிகார பதவியிலும் இருந்தது கிடையாது. பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை நான் பெற்றவன் கிடையாது. என் தமிழைக் கொடுத்து இரவெல்லாம் உழைத்த என்னை ஜனநாயகத்தின் அடிப்படையில் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு கொடுத்த உரிமையைப் பறிக்காதீர்கள். ஒரு மூத்த தலைவரை அவமானப்படுத்தாதீர்கள். இது முறையற்ற செயல். ஒற்றை தலைமை கற்பனை என்று நீங்களே சொல்லிவிட்டு அடுத்த வரத்திலேயே நான்தான் அதிபர் என்று அதிமுகவை அபகரித்தது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல் தவறு என்று சொல்லி நான் என் பதவியை ராஜினாமா செய்து விட்டு விலகி வந்தேன்.

வந்ததற்கு பிறகு மறுபடியும் எடப்பாடி பழனிசாமி என்னை நீக்கினார். ஆனாலும் அந்த இயக்கத்தை ஒன்று படுத்துவதற்கு, ஒற்றுமைப்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றும் முயற்சித்தோம். ஆனால் அதிமுகவை எடப்பாடி அபகரித்தார். எடப்பாடியை பாஜக அபகரித்துவிட்டது. ஒரு அபகரிப்பு இன்னொரு பெரிய அபகரிப்பாக மாறிவிட்ட நிலையில் இனியும் என் உழைப்பையும், என் ஆயுளையும் கரைத்துக் கொண்டு வீணாக்க விரும்பாமல் அதிமுகவை பெற்றெடுத்த இயக்கமான திமுகவில் இணைந்து விட்டேன்'' என்றார்.