பா.ம.க.வில் அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கும்பகோணத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (10.07.2025) நடைபெற்றது. இதில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ''ஐந்து வயசு குழந்தை மாதிரி நான் இருக்கேனாம். அப்படியென்றால் அந்த குழந்தை தான் மூன்று வருடத்திற்கு முன்பு உங்களை தலைவர் ஆக்கியது. இப்பொழுது சொல்கிறேன் என் பெயரை யாரும் போடக்கூடாது. இன்சியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய பெயரை போடக்கூடாது. ஏனென்றால் என் பேச்சைக் கேட்கவில்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. உங்களை செயல் தலைவர் என்று தான் சொல்கிறோம். மக்களை சென்று பாருங்கள். மக்களுடன் மக்களாக வாழுங்கள். மக்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். ஊர் ஊராக போங்கள்'' என்றார்.
நேற்று இரவு தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் இல்லாத நேரத்தில் அன்புமணி ராமதாஸ் அவருடைய தாயார் சரஸ்வதி சந்திப்பதற்காக வருகை தந்துள்ளார். இந்நிலையில் உங்களை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என அன்புமணி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் '37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாமக வெற்றிப் பயணத்தை விரைவுபடுத்துவோம்' என பாமகவினருக்கு அன்புமணி அறிக்கை மடலை வெளியிட்டுள்ளார்.
அதில், 'பாட்டாளி சொந்தங்களுக்கு அன்புமணி இராமதாஸ் மடல். என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16&ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37&ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகத்தான தருணத்தில் இம்மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கங்களையும், உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகநீதி சாதனைகளையும் கடந்து, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது, வேளாண் விளைநிலங்களை தொழில் பயன்பாட்டுக்காக கையகப்படுத்துதைத் தடுத்தது, பல கட்டப் போராட்டங்களை நடத்தி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் கொண்டு வரச் செய்தது, போதைப் பொருள்களின் நடமாட்டம் மற்றும் மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருவது, மின்கட்டண உயர்வுக்கு எதிராகவும், உழவர்களுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலை கிடைப்பதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி இடைவிடாமல் போராடி வருகிறது. தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும், இன்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஓர் அரசியல் கட்சி மக்களுக்கான உரிமைகளை போராடிப் பெற்றுக் கொடுக்கும் நிலையிலேயே தொடர முடியாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை எட்ட வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கம்.
அந்த இலக்கை நோக்கிய பயணத்திற்காகத் தான் நாம் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். வலிமையான சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைத்தல் ஆகிய பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். கடந்த மே 30&ஆம் தேதி அந்தப் பணிகள் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே பேரெழுச்சி காணப்படுகிறது.
இதை பயன்படுத்திக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் சமூகநீதிக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்காகவும் நாம் நடத்திய போராட்டங்கள், படைத்த சாதனைகள், மத்திய அரசில் அங்கம் வகித்ததன் மூலம் மருத்துவத் துறையிலும், தொடர்வண்டித் துறையிலும் பாட்டாளி மக்கள் ஆற்றிய பணிகள், தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட தமிழ்நாட்டு மக்களை திமுக ஆட்சியின் கொடுமைகளில் இருந்து காக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. அதனால் தான், 1. சமூக நீதிக்கான உரிமை (Right to Social Justice), 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை (Women's Right to Live Free from Violence) 3. வேலைக்கான உரிமை (Right to Employment) 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை (Right to Farming & Right to Food) 5. வளர்ச்சிக்கான உரிமை (Right to Development) 6.அடிப்படை சேவைகளுக்கான உரிமை (Right to Public Services), 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை (Right to Health & Right to Education) 8. மது&போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை (Right to be Free from Alcohol & Drug Harm) 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை (Right to Sustainable Urban Development) 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை (Right to a Healthy Environment) ஆகிய 10 உரிமைகளை தமிழக மக்களுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 25 ஆம் நாள் முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
இவை எதுவுமே தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இவை அனைத்தும் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பதற்கான செயல் திட்டத்தின் அம்சங்கள் தான். தமிழ்நாட்டைக் காப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் எனும் நிலையில், இவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 37&ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் நாம் அனைவரும் செய்ய வேண்டிய முதன்மைச் செயலாகும். அதுவே திமுக அரசை அகற்றுவதற்கான தொடக்கமாகட்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு தொடக்கவிழாவை, அனைத்துக் கிளைகளிலும் குறைந்தது ஓர் இடத்திலாவது முறையான அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைத்து பா.ம.க. கொடியேற்றி கொண்டாட வேண்டும். இந்த நாளில் தொடங்கி 9 மாதங்களில் நாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள், மக்களை வதைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும், அடுத்த ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38ஆம் ஆண்டு விழாவை ஆளும் கூட்டணிக் கட்சியாக கொண்டாடுவதற்கு தொடக்கவுரை எழுதும் வகையிலும் அமைய வேண்டும். உங்களுக்காக நான் இருக்கிறேன்... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம். இது உறுதி' என தெரிவிக்கப்பட்டுள்ளது.