சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நேற்று (14.10.2025) காலை 09:30 மணிக்குச் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை மறுநாள் வரை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசுகையில், “கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனத்தைப் பின்தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும் கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

Advertisment

நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும் கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரச்சார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பேசுவோம் என்று பிடிவாதமாகத் தொடர்ந்து முன்னேறிச் சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணை செயலாளரிடம் பலமுறை தொடர்பு கொண்டு பிரச்சார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும், அவர் த.வெ.க. கட்சியின் தலைவர் தனது உரையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisment

காவல்துறையின் விதிமுறை வழிமுறைகளை மீறி வாகனம் அக்ஷயா மருத்துவமனையிலிருந்து சுமார் 30 இலிருந்து 35 மீட்டர் தூரம் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினுடைய நிலை குலையச் செய்தது . இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியிலே பீதி, மூச்சுத்திணறல், மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கிறார்கள். கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து தகரக் கொட்டகையை அகற்றியும் , வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க ஜெனரேட்டர் ஆப்பரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும் சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கூறுவதைக் கவனித்துக் காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். 

karur-stampede-karur-town-ps

இவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை. காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்புப் பணிகளில் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது த.வெ.க. கட்சியினர் 2 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தைச் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் மீட்புப் பணிகள் தடைப்பட்டன. இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கரூர் நீதித்துறை நடுவர் முன்பு சரணடைந்திருக்கிறார் . மற்றொரு குற்றவாளி 2 வழக்குகளிலும் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

Advertisment


கரூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறிந்த உடனேயே தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநர் உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டார்கள். மேலும் அன்று இரவே நானும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். கரூர் துயரத்தைக் கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் உடனடியாக கரூருக்கு அன்றைய இரவே சென்றேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் பார்வையிட்டு மருத்துவரோடு ஆலோசித்து உத்தரவு பிறப்பித்தேன். அரசின் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். அமைச்சர்கள் பலரும் அங்குச் சென்று பணியாற்றினார்கள்”என உருக்கமாகப் பேசினார்.