நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று (18.09.2025) இரவு 08:30 மணியளவில் உயிரிழந்தார். முன்னதாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
ரோபோ சங்கரின் உடல் அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ரோபோ சங்கர் தீபாவளி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித், தனுசு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துத் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் பாமகவின் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 'திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நகைச்சுவைக் கலைஞராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் பங்கேற்கத் தொடங்கிய நாளில் இருந்தே அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்டு ரசித்து வந்திருக்கிறேன். மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும் இறுக்கமாக இருந்த காலங்களில் என்னை அவரது நகைச்சுவைகளின் மூலம் கவலைகளை மறந்து சிரிக்க வைத்தவர் சங்கர்.
திரைத்துறையில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்க வேண்டிய ரோபோ சங்கர் இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.