இன்று காலை சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை தொடங்கி வைக்க வந்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று எடப்பாடி அவருடன் சந்திப்பு மேற்கொண்டார்.

Advertisment

இந்த சந்திப்புக்கு பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். நாங்கள் அரசியலில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அதிமுக இணைப்பு பற்றியோ அல்லது அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லியில் சந்தித்திருந்தது பற்றியோ நாங்கள் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக பார்த்துவிட்டு செல்லலாம் என வந்தேன்.

இன்னும் தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கிறது. இப்பொழுது 'உங்களுடன் முதலமைச்சர்' என்ற ஒரு  திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதனால் அதிகாரிகள் தான் தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு வீதி வீதியாக சென்றுள்ளார்கள். இதில் மக்கள் நலன் இருப்பதுபோல் தெரியவில்லை. அதனால் தேர்தல் வரும் பொழுது எப்படி இருந்தாலும் மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவார்கள் என்பது மட்டும் தெரிகிறது. காரணம் மக்கள் எழுச்சி எங்கள் கூட்டணி பக்கம் இருக்கிறது' என்றார்.

a5302
'I can't tell fortunes to Vijay' - Nainar Nagendran interview Photograph: (bjp)
Advertisment

'ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை கட்சியில் இணைக்க மாட்டேன் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் இருவர்களுக்கும் என்.டி.ஏ கூட்டணியில் இடம் இருக்குமா?' என்ற கேள்விக்கு, ''அதை நீங்கள் ஓபிஎஸ், டிடிவியிடம் தான்  கேட்க வேண்டும். ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் தென்மாவட்டம் வட மாவட்டம் என்று பிரிக்க வேண்டிய அவசியமே கிடையாது. மேற்கு தொகுதி கொங்கு நாடாக இருந்தாலும் சரி, வடக்கு பகுதியாக இருந்தாலும் சரி இன்று தமிழ்நாட்டில் உறுதியாக ஆட்சி மாற்றம் உள்ளது என்பதை தான்  உறுதியாக சொல்ல முடியும். விஜய் இப்பொழுது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று சொல்லக்கூடாது. அதற்கு தேர்தல் வரவேண்டும், ஒழுங்கான வேட்பாளர்களை போட வேண்டும், அதற்கான பொறுப்பாளர்களை போட வேண்டும், மக்கள் ஓட்டு போட வேண்டும் அதற்கு பிறகு தான் சொல்ல முடியுமே தவிர ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது.

பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து இப்பொழுது கட்சியெல்லாம் எப்படி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். 4 வருடம் முதல்வராக  இருந்தார் இபிஎஸ். முதலமைச்சராக நன்றாக பணியாற்றினார். அவருக்கு எல்லா விஷயங்களும் தெரியும். எத்தனை துறைகள் இருக்கிறது, எப்படி வேலை செய்ய வேண்டும், மத்திய அரசில் எவ்வளவு பணம் வாங்க வேண்டும், எத்தனை கோடிகளை சாலைகளுக்காகவும் மக்களுக்காகவும் மின்சாரத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் எல்லாம் தெரியும்'' என்றார்.