சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட 32 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார். நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''நான் அரசுத் துறைகளில் அதிகமாக அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டு வருகிறேன். அதற்கு காரணம் சேகர்பாபு தான். சில நேரங்களில் பணியின் காரணமாக நான் வெளியூர்களுக்குச் சென்று விடுவதால் முதலமைச்சர் அறைக்கு பக்கத்தில் உள்ள செய்தியாளர் சந்திப்பு அறையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுண்டு.
அப்படி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை எடுத்துப் பார்த்தாலும் அதிலும் இந்து சமய அறநிலையத்துறை தான் முதலில் உள்ளது. அறநிலையத்துறை சார்பில் நான்கு வருடத்தில் எத்தனை திருமணங்கள் நடந்திருக்கிறது என சேகர்பாபுவிடம் கேட்டேன். 1800 என்று சொன்னார். இன்று மட்டும் 576 திருமணங்கள். எந்த விவரத்தைக் கேட்டாலும் ஆயிரத்தைத் தாண்டி தான் சொல்வார் சேகர்பாபு. மொத்தத்தில் 2,376 திருமணங்களை நடத்தி அந்த குடும்பங்களில் ஒளியேற்றி வைத்திருக்கிற துறை தான் சேகர்பாபு பொறுப்பேற்றிருக்கும் அறநிலையத்துறை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2,376 திருமணங்களில் 150 திருமணங்கள் நானே தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன். நம்ம ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பார்த்து சிலருக்கு வயிற்று எரிச்சல். பக்தியின் பெயரில் பகல் வேஷம் போடுபவர்களுக்கு இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பத்திரிகையில் நான் காவடி எடுப்பது போன்றும் அமைச்சர்கள் கீழே உருளுவதும் போன்றும் ஒரு கேலிச்சித்திரம் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வரவில்லை. இன்னும் எங்களைக் கேலி செய்யுங்கள், கிண்டல் பண்ணுங்கள். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. பக்தர்கள் போற்றுகின்ற ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது'' என்றார்.