'I can't announce you in your hurry' - furious Premalatha Vijayakanth Photograph: (DMDK)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாகப் பேட்டி அளித்தார். ''தமிழகத்தில் யார் யாரெல்லாம் இப்பொழுது களத்தில் போட்டியில் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? திமுக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, சீமான் ஆல்ரெடி வேட்பாளர்களை அறிவித்து வருகிறார், விஜய் தனித்து தான் போட்டியிடுவோம் என்று சொல்லி வருகிறார். இது உங்களுக்கே தெரியும். ஆனால் என்னுடைய வாயில் சொல்ல வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் எங்களின் தோழமைக் கட்சிகள் தான். பேசுவது, பழகுவது வேறு ஆனால் அரசியல் என்று வரும் பொழுது, கூட்டணி என்று வரும் பொழுது அது வேறு. எங்களுக்குரிய மரியாதை, எங்களுக்குரிய நியாயம் எங்கு கிடைக்கிறதோ அங்குதான் எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள் விரும்புகின்ற இடத்தில் கூட்டணி அமைப்போம். உங்கள் அவசரத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று கிடையாது.
மாநாட்டில் சொல்கிறேன் என்று சொன்னீர்கள் என்று நீங்கள் சொல்லாதீர்கள். இது எங்களுடைய கட்சி, எப்பொழுது முடிவெடுக்க வேண்டும், சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நானும் இதேபோல் உங்களிடம் கேட்கிறேன் உங்கள் குடும்பத்தில் ஒரு தனிப்பட்ட ஒரு பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள் அதைப் பொதுவெளியில் சொல்வீர்களா? தேமுதிக என்பது எங்களுடைய குடும்பம். எங்கள் மாவட்ட கழகச் செயலாளர்களுடன் நான் கலந்து பேசியதைப் பொதுவெளியில் இப்போது நான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உரிய நேரம் வரும்போது சொல்கிறேன்''என்றார்.
Follow Us