சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நேற்று (14.10.2025) காலை 09:30 மணிக்குச் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை மறுநாள் வரை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார்.
இத்தகைய சூழலில்தான் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதே சமயம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் அப்பாவு இருக்கை முன் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அச்சமயம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளில் சென்று அமர சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார். இருப்பினும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
பேரவை கூட்டத்திற்கு பின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் பேசுகையில், ''கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இன்று தமிழகம் முதல்வர் நேரமில்லா நேரத்திற்கு முன்பாக என்ன நடந்தது; அரசு என்ன பணிகளை செய்தது; எவ்வாறு இந்த பிரச்சனையை அரசு கையாண்டது என்பது தொடர்பாக விளக்கமளித்தார். அதற்கு பிறகு முறையாக கவன ஈர்ப்பை ஒரு வாரத்திற்கு முன்பாக பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் சர்வே செய்தது நான்தான். நான் பேசுவதற்கான முதல் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
நான் பேரவை தலைவருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். மரபை கடைபிடிக்க வேண்டும் அல்லது விதிகளை கடைபிடிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்பதற்காக என்னுடைய உரிமையை நான் விட்டுக் கொடுக்க முடியாது. அந்த அடிப்படையில் எனக்கு அதிக நேரம் பேச வாய்ப்பளிக்க வேண்டும். எனக்கு முதல் வாய்ப்பு வேண்டும் என்று கேட்டேன். மறுக்கப்பட்டது.
கடைசியாக தான் வாய்ப்பு கிடைத்தது. கடைசி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றும், தமிழக மக்கள் அறிவுள்ள மக்கள் ஏன் சினிமா பிரபலங்களை சென்று பார்ப்பதற்காக உங்கள் இன்னுயிரை தியாகம் செய்கிறீர்கள். பச்சைக் குழந்தைகள் மீது ஏறி நின்று செல்பி எடுக்கின்ற மோகம், வீடியோ எடுக்கின்ற மோகம் தமிழ் சமூகத்திற்கு கூடாது என்றும், தமிழ்நாடு அரசு அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதனை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை தமிழகம் முதல்வர் ஏற்படுத்த வேண்டும். அதேபோல தமிழர் அல்லாத இருவர் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரணை ஆணையத்தில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு ஒட்டுமொத்த தமிழர்களையும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசையும் அவமதிப்பது போல் உள்ளது. இதையும் தமிழகம் முதல்வர் தலையிட்டு தீர்ப்பு திருத்தி எழுதப்படுவதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என வேண்டுகோளை முன் வைத்தேன்'' என்றார்.