தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (22-12-25) கொண்டாடப்பட்டது. தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்ற இவ்விழாவில் 40 கிலோ கேக்கை வெட்டி 11 குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய விஜய், 'நான் ஒரு உறுதியை கொடுக்கிறேன். நாமும், நம்முடைய தமிழக வெற்றிக் கழகமும் சமூக சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதில் எந்தவிதமான சமரசமும் இருக்காது. அதனால் நம்முடைய கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை என்று பெயர் வைத்ததே இந்த உறுதியினால் தான். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும், அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அனைத்து புகழும் எல்லாவல்ல இறைவனுக்கே' எனப் பேசியிருந்தார்.
முன்னதாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கட்டுப்பாடுகளுடன் குறைந்த தொண்டர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் 'விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும்' என்ற வாசகம் கொண்ட பதாகையை கையில் ஏந்தியபடி ஆந்திராவில் இருந்து நடந்தே வந்ததாகவும், விஜய்யை பார்க்க நடந்து இங்கே வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அந்த நபர் ஆந்திராவில் எப்படி பவன் கல்யனோ அதுபோல் தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக வரவேண்டும் என நடைப்பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இதனையறிந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் அவரிடம் விசாரித்தனர். எத்தனை நாட்களாக நடந்து வந்தீர்கள் என ஆனந்த் கேட்க, '11 நாட்கள்' என அந்த இளைஞர் கூறினார். பின்னர் ஆனந்த் மற்றும் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் அந்த இளைஞருக்கு பொன்னாடை அணிவித்து அழைத்துச் சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/a5876-2025-12-22-19-01-03.jpg)