பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமதாஸின் மகளும் முகுந்தனின் தாயுமான ஸ்ரீகாந்திமதி மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.
இந்த செயற்குழுவில் பாமக எம்எல்ஏவும், பாமகவின் கொறடாவுமான அருள் பேசுகையில், ''பெண் என்பவர்கள் ஆணை விட உயர்ந்தவர்கள் என ராமதாஸ் சொல்வார். அந்த அடிப்படையில் ஆணைவிட எந்த ஒரு சூழ்நிலையிலும் தகப்பனுக்கு ஒரு வேதனை வருகின்ற பொழுது பெண் சிங்கம் எழுவார்கள். அதுபோன்று ராமதாஸுக்கு ஏற்பட்டிருக்கின்ற மனவலியை போக்க 24 மணி நேரமும் ராமதாஸுக்கு உடனிருந்து அன்பால் அரவணைத்துக் கொண்டிருக்கும் காந்திமதியை வரவேற்கிறேன்.
1988 ஆம் ஆண்டு நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எங்க அப்பா என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது சேலம் நான்கு ரோடு பகுதியில் 100 காரில் ராமதாஸ் பவனி வந்தார். அப்பொழுது எல்லாரையும் பார்த்து கையாட்டியபடி வந்தார்.
எல்லோரையும் பொதுவாக கும்பிட்டார். ஆனால் அவருடைய கண் இரண்டும் என்னை பார்த்தது. நான் அன்றைக்கு அடிமையானவன். இன்றுவரை 36 ஆண்டுகளுக்கு ராமதாஸின் கால்களிலேயே கிடக்கிறேன். நான் எம்எல்ஏ பதவி எதிர்பார்க்கவில்லை, எம்பி பதவி எதிர்பார்க்கவில்லை. ஐந்து முறை தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தந்தார். என்னைக் கட்சியில் இருந்து நீக்குவதாக சொல்கிறார்கள். எனக்கு அதில் வருத்தம் கிடையாது. என்னைக் கட்சியை விட்டு நீக்குவதற்கு பொறுப்பிலிருந்து மாற்றுவதற்கு முழுக்க முழுக்க அதிகாரம் படைத்தவர் ஒரே தலைவர் ராமதாஸ் மட்டும் தான். கட்சி பதவிப் பொறுப்புகள் முக்கியமில்லை. அருளு உன்னுடைய உயிர் வேண்டும் என ராமதாஸ் சொன்னால் டிவிகாரர்கள் முன்னாடியே என்னுடைய கழுத்தை நெரித்துக்கொண்டு சாவேன். அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்'' என ஆக்ரோஷமாக பேசினார்.