இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். தமிழர்களின் பெருமையையும், தமிழ்நாட்டின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்வாக, உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இன்று (04.09.2025) பேசுகிறார் ஸ்டாலின்.
உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்க இருப்பதாக முன்னதாகவே மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் இன்று அது தொடர்பாக வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், ''தமிழர்களுக்கு என் அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் லண்டனில் இருந்து பேசுகிறேன். இன்று மாலை நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. என்ன நிகழ்ச்சி என்றால் உலகப் புகழ் மிக்க ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் நம்முடைய சுயமரியாதை தலைவர், தன்மானத் தலைவர் தந்தை பெரியாருடைய உருவப்படத்தை திறந்துவைத்துப் பேசுவதற்கு பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தன்மானத்தை காத்த தலைவராக இருக்கும் அவரின் உருவப்படத்தைத் திறந்து வைத்துப் பேச இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்''என தெரிவித்துள்ளார்.