சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கை பிரச்சார நிகழ்வு தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் டி.ஆர்.பாலு, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''ஓரணியில் தமிழ்நாடு' என்ற நிகழ்வை இன்று தொடங்கி வைக்கிறேன். மொத்தம் 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. மக்களை ஓரணியில் திரட்டுவது தான் எங்களுடைய முதன்மையான நோக்கம். இந்த ஆட்சி வேண்டும் என வாக்களித்தவர்கள் பெருமைப்பட வேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் இப்படிப்பட்ட கட்சிக்கு வாக்களிக்க தவறிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அந்த சூழ்நிலையில் தான் ஆட்சி நடத்துவேன் என்று சொன்னேன். அதன்படி தான் ஆட்சி நடத்தி வருகிறேன்.

போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலைகூட காவல் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜக அரசால் தமிழும், தமிழ்நாடும் பாதிப்பு அடைவதை நான் சொல்லித்  தெரிய வேண்டியது இல்லை. பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. அமித்ஷா தொடர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டும் என நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பிரதமரும் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரவேண்டும். அதேபோலதான் கவர்னரை மாற்றக்கூடாது என சொல்லி வருகிறேன். கவர்னர் இனி நல்லது செய்தாலும் மக்களிடம் எடுபடாது. அந்த அளவிற்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறார். அதனால் இவர்களெல்லாம் அடிக்கடி வர வேண்டும். வந்து போய் பேசி விட்டுப் போகிறார்கள் என்று மக்களுக்கு தெரிகிறது. அது தேர்தல் நேரத்தில் எங்களுக்கு லாபமாக அமையும்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. நீட் மூலம் மாணவர்களின் கல்வி கனவு பறிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது குறித்து தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும்' என்றார்.