தான் ஒருபோதும் ராஜாவாக விரும்பவில்லை என்றும், அந்த கோட்பாட்டுக்கு தான் எதிரானவன் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு நிகழ்ச்சி இன்று (02-08-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கட்சிப் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, ‘அரசியலமைப்பு சவால்கள்: கண்ணோட்டங்கள் மற்றும் பாதைகள்’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி பங்கேற்று பேச தொடங்கிய போது அங்கிருந்த தொண்டர்கள், ‘நாட்டிற்கு எப்படிப்பட்ட ராஜா இருக்க வேண்டும்? ராகுல் காந்தி போல் இருக்க வேண்டும்’ என்று கோஷமிட்டனர். உடனடியாக அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இல்லை..இல்லை... நான் ராஜா இல்லை. ராஜா ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. நான் ‘ராஜா’ என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்” என்று தெரிவித்தார். இதனை கேட்டதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆரவாரமாக கத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, வாக்குத் திருட்டில் பா.ஜ.கவுடன் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி இந்த நாட்டின் ராஜா போல் செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.