மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று முன்தினம் (21.08.2025) நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே த.வெ.க. மாநாட்டில் கலந்து கொண்ட நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஷன் என்பவர் மாநாட்டுத் திடலில் மயக்கமடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் மூச்சுத்திணறி உயிரிழந்திழந்தார். 

Advertisment

மேலும் அக்கட்சியின் நிர்வாகிகளான பிரபாகரன், காளிராஜ் ஆகியோரும் உயிரிழந்ந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நம் மீது தீராப் பற்று கொண்ட கட்சித் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி ஆர். பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் பகுதியைச் சேர்ந்த கே. ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி கே. காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். 

நம் கட்சிக்காக இவர்களது பற்றுறுதியும் பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கட்சித் தோழர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கட்சி உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக விருதுநகரில் தமிழக வெற்றிக் கழக கட்சியை வரவேற்று பேனர் வைக்க முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.