கடந்த 15.9.2022 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்றைப் பெற்றது.
இத்திட்டத்தினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு 90%க்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். நகர்ப்புறங்களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவத் மான் கலந்து கொண்டார். நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''எங்களுக்கு எப்போதும் நீங்கள் தான். உங்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம். காலை உணவு திட்டத்தை நேரடியாக நானே கண்காணிக்கிறேன். இத்திட்டத்தின் மூலம் இனி 20 லட்சம் மாணவர்கள் சூடான சுவையான சத்தான உணவை சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்வார்கள்'' என்றார்.
பஞ்சாப் முதல்வர் பகவத்மான் பேசுகையில், ''தமிழகத்தை போல பஞ்சாப் காலை உணவு திட்டத்தை தொடங்க விரும்புகிறோம். காலை உணவு திட்டத்தைப் போல மிகச் சிறந்த திட்டம் இல்லை. எங்கள் மாநிலத்திலும் காலை உணவு திட்டத்தை தொடங்க பரிசீலிக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் என்பது மிகவும் சிறப்பானது. பஞ்சாப் மாநிலத்தின் ஒவ்வொரு இடத்திலும் தென் மாநில உணவுகள் நிறைந்திருக்கின்றன. அதேபோல பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு உணவு வகைகள் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு தென்மாநிலங்களில் விற்கப்படுவது சிறப்பான விஷயம். தென் மாநில உணவுகள் தான் தேசிய உணவுகள் போல் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கின்றன. பஞ்சாப் என்பது வீர மரணம் அடைந்தவர்களின் இடம். அதை பார்க்க அவசியம் நீங்கள் அனைவரும் வரவேண்டும். கல்வி, சுகாதாரத்திற்கு பஞ்சாப் அரசு அதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பஞ்சாபில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும்'' என்றார்.