தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று (21.09.2025) நடைபெற்றது. இந்த கூட்டம் மாநில தலைவர் முத்தகரம் பழனிச்சாமி தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் ரா. சுப்பிரமணி, மாநில துணைத் தலைவர் அ.எ.கிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி வாழ்த்துரை வழங்கினார். 

Advertisment

இந்த கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “வரப்பு வெட்டியுள்ளேன். நாற்றைப் பிடுங்கியுள்ளேன். நாற்றை நட்டுள்ளேன். சில சமயங்களில் நாற்றை எந்த அளவுக்குப் பிரித்துப் பக்குவமாக நடலாம் என்பதை தெரிந்த விவசாயி தான் எ.வ. வேலு. அந்தக் கதிரில் நெல் மணிகள் விளைந்த பிறகு எடுக்கிற பக்குவம் பார்த்தும், அதன் நிறத்தையும் பார்த்துக் கண்டுபிடிப்பேன். அறுப்பு எடுப்பதும் முக்கிய பணி ஆகும். இது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. அறுப்பு எடுப்பதற்குப் பயன்படும் கருவி தான் அரிவாள். அரைஞாண் கயிற்றில் கோவணத்தைக் கட்டிக் கொண்டு, அதில் அரிவாளைச் சொருகி வைத்திருப்பதே ஸ்டைலோ ஸ்டைல் தான். 

tvm-farmers

பக்குவமாகப் பார்த்து கதிரை அடிப்பார்கள். நான் அதுபோன்று கதிரைத் தூக்கி அடித்த காரணத்தினால் தான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். 75 கிலோ நெல் மூட்டைகளை முதுகில் தூக்கிக் கட்டை வண்டியில் நேராக நிறுத்தி வைக்க வேண்டும். இதுபோன்று மூட்டைகளைத் தூக்கிக் கட்டை வண்டியில் வைத்து அடித்துள்ளேன். எனவே நான் ஒரு ஒரிஜினல் விவசாயி. நாட்டில் நிறையப் பேரைப் பார்த்தால், ஒரு அரை ஏக்கர் விவசாய நிலம் கிடையாது, ஆனால் தன்னைத்தானே விவசாயி என்கிறார்கள். இது தான் கொடுமையாக உள்ளது ” எனப் பேசினார்.