ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கு கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவி நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்கு முதற்கட்டமாக 3000 மீட்டர் ஆழம் வரை கிணறுகள் தோண்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காத நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் 20 இடங்களில் சோதனைக்காக கிணறுகள் அமைக்க ஓஎன்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ராமநாதபுரம் மிகவும் பாதிப்படைந்த பகுதியாக இருக்கும் நிலையில் அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கூடாது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாகயுள்ளது.