நாட்டில் உணவு மற்றும் விளைப் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளில் இருந்து ஹைபிரிட் விதைகளைக் கொண்டு வந்து பயிரிட்டு, நம் நாட்டில் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருந்த விவசாயத்தையும் விதைகளையும் அழித்துவிட்டனர். தற்போது நம் நாட்டு ரக விதைகளைத் தேடிப் போக வேண்டியுள்ளது.
இதேபோல் தான் பூ உற்பத்தியிலும் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, சில வியாபாரிகள் பூக்களின் உற்பத்தி அதிகம் வரவேண்டும் என்று நினைத்து, நாட்டு ரக பூக்களுக்குப் பதிலாக அதே ரகங்களில் ஹைபிரிட் பூ நாற்றுகளை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்து, உற்பத்தி அதிகமாகும் என்று ஆசையும் காட்டியதன் விளைவாக, தற்போது உற்பத்தி அதிகமாக இருந்தாலும், உற்பத்தியாகும் பூக்களை விற்பனை செய்ய முடியாமல், வீதிகளிலும் குப்பைகளிலும் கொட்டி, வாசம் வீசும் மலர்கள் இன்று துர்நாற்றமாகிப் போனது. இதனால், பூ விவசாயிகள் உற்பத்திச் செலவுக்கே பூக்களை விற்பனை செய்ய முடியாமல், கடன் வாங்கி வேதனைப்பட்டு வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/14/untitled-2-2025-10-14-18-17-54.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான பூ உற்பத்தி செய்யும் கீரமங்கலம் சுற்றியுள்ள 50 கிராமங்களில், ஒவ்வொரு நாளும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, செண்டி என ஏராளமான வகை பூக்களை மிகப் பெரிய வியாபார சந்தையான கீரமங்கலத்திற்கு கொண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் குறைந்தபட்சம் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சுப முகூர்த்த நாட்களில் நல்ல விலைக்கு விற்பனையாகும் பூக்கள், மற்ற நாட்களில் மிகக் குறைந்த விலைக்கு கூட விற்பனையாகாமல், குப்பைகளில் கொட்டப்படுகின்றன. அந்தக் குப்பைகளையும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி குப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்லாததால், சாலை ஓரங்களில் அழுகி துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அழுகிய பூக்களை வெளியேற்ற, வியாபாரிகள் வாடகை வாகனங்களில் ஏற்றிச் சென்று தங்கள் தோட்டங்களில் மரங்களுக்கு கொட்டி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கீரமங்கலம் பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பூ உற்பத்தி உள்ளது. நாட்டு ரக பூக்களைத் தான் உற்பத்தி செய்தோம். பருவ காலத்திற்கு ஏற்ப பூ ரகங்கள் உற்பத்தி செய்யப்படும். அதற்கு உரிய விலையும் கிடைத்தது; தேக்கமடையாது. ஆனால், சில பூக்கடைக்காரர்கள் உற்பத்தி அதிகமாக்க வேண்டும் என்று முதலில் ஹைபிரிட் செண்டிப் பூச் செடிகளை விவசாயிகளிடம் வாங்கிக் கொடுத்தனர். அதுவரை கோயில்களிலும் செண்டிப் பூக்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஹைபிரிட் செண்டி வந்ததும், அதை கோயில்களுக்கு பயன்படுத்துவதைத் தடை செய்துவிட்டனர். இறப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாகிப் போனதால், ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் தேங்குகிறது.
அதேபோல், சம்பங்கி பூவிலும் ஹைபிரிட் நுழைக்கப்பட்டு, பல நாட்களில் கிலோவுக்கு ரூ.5-க்கும் ரூ.10-க்கும் வாங்கும் வியாபாரிகள், விற்க முடியாமல் குப்பைக்கு அனுப்புகிறார்கள். இதனால், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவே கிடைக்காமல் நட்டம் ஏற்படுகிறது. நாட்டு ரக பூக்கள் இருக்கும்வரை தேக்கமில்லை; விவசாயிகளுக்கும் நட்டமில்லை. ஆனால், ஹைபிரிட் வந்த பிறகுதான் இப்படித் தேங்கி, மணம் வீச வேண்டிய மலர்கள் துர்நாற்றம் வீசுகின்றன என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/14/untitled-1-2025-10-14-18-17-44.jpg)