மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்சுற்றுப்பயணத்தை ஜூலை 7ம் தேதி தொடங்கிய அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்தார். ஏழாம் நாளான இன்று அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், புள்ளம்பாடி வாய்க்கால் விவசாயிகள் சங்கம், ஏரிகள் மற்றும் வாய்க்கால் ஓடை பாசன சங்கம், நெல்லு, கரும்பு, முந்திரி, பருத்தி, மக்காசோளம் விவசாயிகள் என பலதரப்பட்ட விவசாய சங்கத்தினர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர்.

அனைவரது கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட இ.பி.எஸ் அவர்களிடம், “பல்வேறு அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு குறைகளையும் உங்கள் கருத்துக்களையும் எனது கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா காலத்திலும் அதன்பிறகும் விவசாயிகளை கண் போன்று பாதுகாத்தோம். விவசாயிகள் நாட்டுக்கே உணவளிப்பவர்கள். விவசாயிகள் பாதிப்பின்போது நஷ்டத்தில் இருந்து காப்பாற்றினோம். அமெரிக்கன் படைப் புழு தாக்குதல் கணக்கிட்டு அரசே கட்டுப்படுத்தியதால் பயிர்கள் காக்கப்பட்டது. 2019ல் 186 கோடி நிவாரணம் கொடுத்தோம். நவீன முறையில் பயிர் காக்கும் வகையில் உழவன் செயலி ஆப் வெளியிட்டோம். செல்போன் மூலமே மார்கெட்டில் விலை தெரிந்துகொள்ளலாம். நோய்த் தாக்குதல் பற்றி தெரிந்துகொள்ளலாம். என்ன பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் காக்கலாம் என்றெல்லாம் விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்தோம்.

Advertisment

விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் நலன் காத்த அரசு. பல ஆண்டுகள் ஏரி, குளம், குட்டை தூர் வாராமல் இருந்தது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 6000 ஏரிகள் தூர்வாரப்பட்டது. வண்டல் மண்ணை விவசாயிகள் நிலத்துக்கு இயற்கை உரமாகப் பயன்பட்டது. பருத்திக்கு பூச்சிகள் தாக்குதல் பற்றி கேள்விபட்டு உடனடியாக தீர்வுகண்டோம். மரவளிக்கிழங்கு மாவுப்பூச்சி தாக்குதல். அதையெல்லாம் கணக்கிட்டு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து காத்தோம்.

நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு 50 கோடி மானியம். பசுமை வீடுகள் கொடுத்தோம். மனுக்களை கொடுத்திருக்கீங்க, அதனை ஆய்வுசெய்து அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். டிராக்டர் பெண்கள் பெயரில் வாங்கினால் மானியம் கொடுத்தோம். எவ்வித முறைகேடும் இன்றி ஆன்லைனில் கொடுத்தோம்.

திமுக ஆட்சியில் அதனை ரத்துசெய்துவிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்தனர். கால்நடைப் பூங்கா அமைத்துக் கொடுத்தோம். ஆராய்ச்சி மூலமாக விவசாயிகளுக்கு கொடுக்க இருந்தோம். ஆடிட்டோரியம், விவசாயிகள் தங்குமிடம் கட்டினோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்த ஆராய்ச்சி நிலையம் அப்படியே பூட்டிக்கிடக்கு. மீண்டும் அதிமுக ஆட்சி வரும், கால்நடைப் பூங்கா திறக்கப்படும், கலப்பின பசுக்களை உருவாக்கி இலவசமாகக் கொடுப்போம். இன்னும் நிறைய செய்திருக்கிறேன்

Advertisment

கரும்பு மெட்ரிக் டன் 4000 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னார்கள். நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள் கொடுக்கவில்லை.

கடலூர் புயல் சேதம் ஏற்பட்டபோது முந்திரி நடவைப் பெருக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்தோம். மீண்டும் உங்கள் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும்’’ என்று நம்பிக்கை கொடுத்தார்.