கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் கக்கேரா பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சங்கப்பா. இவருக்கும் டோனிகரா பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாரம்மாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில ஆண்டுகள் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். ஆனால், போகப் போக கணவர் சங்கப்பா மனைவியை சரியாகக் கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் சில காலங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்து மாரம்மா டோனிகராவில் உள்ள தனது தாய்வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அந்தப் பகுதியில் கிடைக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டு, தனது தாய்வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், அவ்வப்போது கணவர் சங்கப்பா மட்டும் மனைவியை வந்து பார்த்துச் செல்வாராம்.
இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி மனைவியைப் பார்ப்பதற்காக கணவர் சங்கப்பா டோனிகராவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், மாரம்மா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இருப்பினும் கணவர் தொடர்ந்து வற்புறுத்த, திட்டவட்டமாக அவரது மனைவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கப்பா, வீட்டின் அருகே கிடந்த கோடரியை எடுத்து மனைவியை என்று கூடப் பார்க்காமல் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மாரம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து நேரடியாக சுராபுரா காவல் நிலையத்திற்கு சென்ற சங்கப்பா, தனது மனைவியை கொன்றுவிட்டதாகக் கூறி சரணடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். பின்னர், அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரம்மாவின் உடலை கைப்பற்றிய சுராபுரா காவல் நிலைய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கணவர் சங்கப்பாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சங்கப்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடலுறவுக்கு வரமறுத்த மனைவியை கணவன் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.