தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூரைச் சேர்ந்தவர் பிரம்மையா. இவரது மனைவி 37 வயதான கிருஷ்ணவேணி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பிரம்மையா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் அவரது மனைவி கிருஷ்ணவேணி, கூட்டுறவு வங்கி ஒன்றில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கணவர் பிரம்மையாவிற்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவி தான் வேலை பார்க்கும் வங்கியில் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாகப் பிரம்மையா சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார். இது குறித்து தனது மனைவியிடம் பிரம்மையா கேட்டுச் சண்டையிட்டு வந்திருக்கிறார். சில சம்பவங்களில் இந்தச் சண்டை பெரியதாக மாறிக் கை கலப்பு வரை சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே இது தொடர்பாக மனக்கசப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கிருஷ்ணவேணி வீட்டில் யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். உடனே பிரம்மையா அவரைச் சந்தேகப்பட்டு, அவருடன் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரம்மையா, வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து மனைவி கிருஷ்ணவேணியைப் பலமாகத் தாக்கியிருக்கிறார். இதனால் கீழே சரிந்த கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து பிரம்மையாவைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us