உத்தரபிரதேசம் மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியில் வரதட்சணை கொடுமை செய்து 8 வயது மகனின் கண் முன்னே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மத்தியப் பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கட்டி போட்டு சூடான கத்தியால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேசம் மாநிலம், கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 23 வயதான குஷ்பூ பிப்லியா என்ற பெண். இவருக்கு கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில நாட்களிலேயே குஷ்பூவை அவரது கணவர் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதில் குஷ்பூ கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி இரவு குடிபோதையில் இருந்த கணவர், குஷ்பூவை அடித்து உதைத்து சமையலறைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர், குஷ்பூவின் கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டி தலையில் துப்பாக்கி போன்ற ஒன்றை அழுத்தியுள்ளார். மேலும், சூடான கத்தியால் குஷ்பூவின் உடலில் பல இடங்களில் சூடு வைத்துள்ளார். இதில் பல இடங்களில் காயப்பட்ட குஷ்பூ வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். வலியால் அலறியபோது அவரது வாயில் சூடான கத்தியை செருகியதாகக் கூறப்படுகிறது. தனது பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் குஷ்பூவுக்கு மனதளவிலும் வேதனை கொடுத்துள்ளார். இந்த கொடூரத் தாக்குதலின் போது கணவரின் குடும்பத்தினர் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு முழுக்க வலி தாங்க முடியாமல் இருந்த குஷ்பூ, அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து தப்பித்துள்ளார். அதன் பின்னர், துப்புரவுப் பணியாளர் ஒருவரிடமிருந்து மொபலை வாங்கிக் கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குஷ்புவின் தந்தை லோகேஷ் வர்மா, உடனடியாக தனது இளைய மகன் மூலம் தனது மகள் குஷ்புவை அழைத்து வந்துள்ளார். அதன் பின்னர், குஷ்புவை சிகிச்சைக்காக ஆவர்காச்சில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனிடையே திருமணத்திற்குப் பிறகு, அவரது கணவர் பலமுறை தன்னை வெறுத்துவிட்டதாகவும், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் குஷ்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்,  இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குஷ்புவின் குடும்பத்தினர், கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.