இந்திய சமூகக் கட்டமைப்பில் குடும்ப வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் தங்கள் மனைவிகளை கணவர்கள் அடித்துத் துன்புறுத்துவதும், சில இடங்களில் மனைவிகள் கணவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் நடந்து வருகிறது. அதன் காரணமாக அடிதடிகள், கொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்நிலையில், இதேபோன்று ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கலுஜுவ்வலபாடு கிராமத்தைச் சேர்ந்த குருநாதம் என்பவருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குருநாதமும், லட்சுமியும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் சென்ற குருநாதத்திற்கு அங்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, அங்கேயே தனியாக வீடு எடுத்து அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். மறுபுறம், தனது கிராமத்தில் 4 குழந்தைகளுடன் வசித்து வரும் லட்சுமி, வீட்டின் அருகே உள்ள பேக்கரியில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இதனிடையே, குருநாதம் அவ்வப்போது கிராமத்திற்கு வந்து தனது மனைவியையும் குழந்தைகளையும் பார்த்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் வரும்போதெல்லாம் அதீத கஞ்சா போதையில் வீட்டிற்கு வருவாராம். பேக்கரியில் தினந்தோறும் கடுமையாக வேலை செய்து குழந்தைகளின் தேவைக்காக லட்சுமி சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பறித்துக்கொண்டு சென்று விடுவாராம்.
அந்த வகையில், அண்மையில் ஹைதராபாத்திலிருந்து கிராமத்திற்கு வந்த குருநாதம், மனைவியின் சம்பளப் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால், லட்சுமி பணம் தர மறுத்திருக்கிறார். அதனால் ஆத்திடமடைந்த குருநாதம் லட்சுமியை சரமாரியாக அடித்துள்ளார். மேலும், அதீத கஞ்சா போதையில் இருந்த அவர், மனைவியின் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி, தனது பெல்ட்டைக் கழற்றி கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், பெண்ணை என்று கூடப் பார்க்காமல் காலால் உதைத்து, அடித்து, கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் லட்சுமி கதறித் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தாக்குதலைத் தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், விடாமல் குருநாதம் தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய நிலையில், பலரும் இதற்கு எதிராகக் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், காவல்துறையினர் வீடியோவின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி, குருநாதம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.