சென்னை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த 27 வயதான அஞ்சலி (பாதிக்கப்பட்ட பெண்ணின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். அதீத கடவுள் நம்பிக்கை கொண்ட அஞ்சலி, அருகிலுள்ள ஆதிபூரீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது, கோயில் பூசாரி ஆசோக் பாரதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பூசாரி என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து, அஞ்சலி தனது குடும்பப் பிரச்சினைகளையும், அதனிப்பட்ட விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதைக் கேட்ட பூசாரி, "உன் வீட்டில் தீய சக்தி இருக்கிறது. அதை வெளியேற்றினால் உன் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்," என்று கூறியுள்ளார். மேலும், "மந்திரிக்கப்பட்ட ருத்ராக்ஷ மணிகளை அணிந்தால் தீய சக்தி விலகி, குடும்பம் நலமாக இருக்கும்," என்று தெரிவித்திருக்கிறார். இதை நம்பிய அஞ்சலி, உடனடியாக ருத்ராக்ஷ மணி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பூசாரி, "நான் தரும் ருத்ராக்ஷ மணியை வடபழனி முருகன் கோயிலில் பூஜை செய்தால் மட்டுமே அது பலன் தரும்," என்று கூறியுள்ளார்.

இதற்காக, கடந்த 6-ம் தேதி இருவரும் வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்றனர். ஆனால், அப்போது கோயில் நடை மூடியிருந்ததால் பூஜை செய்ய முடியவில்லை. உடனே பூசாரி, "நடை திறந்த பிறகு வந்து பூஜை செய்து மணியைத் தருகிறேன். அதுவரை அருகிலுள்ள எனது உறவினர் வீட்டில் இருந்துவிட்டு வரலாம்," என்று கூறியுள்ளார். இதற்கு அஞ்சலியும் சம்மதம் தெரிவித்து, அவருடன் சென்றிருக்கிறார். ஆனால், உறவினர் வீடு பூட்டியிருந்த நிலையில், சாவி பூசாரி ஆசோக் பாரதியிடமே இருந்துள்ளது. பின்னர், அந்த சாவியைப் பயன்படுத்தி இருவரும் வீட்டைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கு வைத்து அஞ்சலிக்கு, பூசாரி பாலியல் உணர்வுகளை தூண்டியுள்ளார். அதன்பிறகு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

இதற்கிடையில், அஞ்சலியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அவரது கணவர், கடந்த சில நாட்களாக அவர் வெளியே செல்லும்போது பின்தொடர்ந்து வந்தார். அப்படி பின்தொடர்ந்தபோது, அஞ்சலியும் பூசாரியும் உறவினர் வீட்டில் தனிமையில் இருந்ததை கையும் களவுமாக பிடித்துள்ளார். ஆத்திரமடைந்த அவர், பூசாரியைத் தாக்கி, இருவரும் தனிமையில் இருந்ததை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

Advertisment

பின்னர், அஞ்சலியிடம், "நீங்கள் தனிமையில் இருந்த வீடியோ என்னிடம் உள்ளது. இதை உன் பெற்றோரிடம் காட்டி உன்னை அவமானப்படுத்துவேன். அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால், நீயும் பூசாரியும் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் தர வேண்டும்," என்று மிரட்டியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அஞ்சலி, அதிர்ச்சியில் உறைந்தார்.

ஒரு கட்டத்தில், பொறுமையிழந்த அஞ்சலி, "குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி பூசாரி என்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும், அதனை என் கணவர் இதை வீடியோவாகப் பதிவு செய்து 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார் என்றும்  பூசாரி ஆசோக் பாரதி மற்றும் தனது கணவர் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், பூசாரி அசோக் பாரதி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடியோ பதிவு செய்து 10 லட்சம் ரூபாய் மிரட்டியது தொடர்பாக அஞ்சலியின் கணவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisment

கோயிலுக்கு வந்த பெண்ணை பூசாரி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அதனை வீடியோவாக பதிவு செய்து பெண்ணின் கணவர் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது.