தெலுங்கானாவைச் சேர்ந்த நபர், தனது மனைவியை கொடூரமாகக் கொலை செய்து உடலில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரவாணி (27). இவருக்கு, கோதரயவரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீசைலம் (30) என்ற நபருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஸ்ரவாணி தனது சகோதரியின் கணவரோடு திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக ஸ்ரீசைலம் சந்தேகமடைந்துள்ளார். இதன் காரணமாக, மனைவியை ஸ்ரீசைலம் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதில் மனமுடைந்த ஸ்ரவாணி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீசைலம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் தனது கணவரை பிரிந்து, ஸ்ரவாணி தனது குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கினார்.
இந்த நிலையில், வெளியே சென்ற ஸ்ரவாணி வீடு திரும்பவில்லை என்றும், அவர் காணாமல் போனதாகவும் ஸ்ரவாணியின் தந்தை கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தனர். அந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஸ்ரவாணியின் கணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன்படி, ஸ்ரவாணியின் கணவரான ஸ்ரீசைலமிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் எதையும் சொல்லாத அவர், இறுதியாக மனைவியை தான் தான் கொலை செய்தேன் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீசைலம் மற்றும் ஸ்ரவாணி ஆகியோர் தனித்தனியாக வாழ்ந்த நிலையில், ஸ்ரீசைலம் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு சென்ற அவர், கடந்த 1 வருடமாக ஸ்ரவாணியுடன் தொலைப்பேசி மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தான் திருந்திவிட்டதாகவும், தன்னுடன் சோமசிலாவுக்கு பைக்கில் வருமாறும் கடந்த 21ஆம் தேதி ஸ்ரவாணியிடம் ஸ்ரீசைலம் கூறியுள்ளார். இதனை நம்பிய ஸ்ரவாணி, அவருடன் பைக்கில் சென்றுள்ளார். அதன் பின்னர், ஸ்ரவாணியை தொலைதூர சதபூர் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீசைலம், அங்கு வைத்து ஸ்ரவாணியை கத்தியால் கொடூரமாகக் குத்தினார். அதன் பின்னர், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். இறுதியாக அவரின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து தப்பிச் சென்றுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், தனது மனைவியை கொலை செய்வதற்காக ஸ்ரீசைலம் 1 மாதமாக திட்டமிட்டு வந்ததாகவுன், அதற்காக எர்ரகட்டாவில் உள்ள கடையில் கத்தியை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஸ்ரீசைலத்தை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/26/policenew-2025-08-26-18-32-53.jpg)