செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் ஜெகத்குரு (32) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வனிதா (29) என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு ஒரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, கணவரைப் பிரிந்து கடந்த 7 மாதங்களாக வனிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
வனிதா, திருமணத்திற்கு முன்பு டி.நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(33) என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கணவனைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த வனிதாவிற்கும் முன்னாள் காதலர் பிரகாஷ்னுக்கும் இடையே மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கணவர் ஜெகத்குரு, தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடி செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரிலிருந்து பழஞ்சநல்லூர் கிராமத்திற்கு வந்தார். அப்போது, மனைவி வீட்டில் இல்லை என்றும், அவர் வேறொருவருடன் குடும்பம் நடத்தி வருவதாகவும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், ஜெகத்குரு காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் அளித்துள்ளார்.புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வனிதா பிரகாஷுடன் வசித்து வருவது தெரியவந்தது. பின்னர், இருவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில், வனிதா தனது முன்னாள் காதலன் பிரகாஷுடன் வசிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர், பெற்றோர், கணவர் உள்பட பலரும் பேச்சுவார்த்தை நடத்தியும், வனிதா, பிரகாஷுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதையடுத்து, “எனது மனைவிக்கு யாருடன் வாழப் பிடித்திருக்கிறதோ, அவருடனே சந்தோஷமாக வாழட்டும்,” என்று கண்ணீர் மல்க வாழ்த்திவிட்டு, தனது குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.
திருமணத்தை மீறிய உறவினால், இரு தரப்பிலும் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆத்திரத்தில் கொலைகளைச் செய்துவிட்டு ஆணோ, பெண்ணோ சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், “எங்கிருந்தாலும் வாழ்க,” என்று மனைவியின் சந்தோஷத்திற்காக கணவர் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த சம்பவம் அப்பகுதியினரை திகைக்கவைத்துள்ளது.