திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் உதவி காவல் ஆய்வாளர் பாபா. இவரது மகன் காஜா ரபிக் என்பவருக்கும், வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான நர்கிஸ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. திருமணமான நாள் முதல், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
முதலில் கணவரின் குடும்பத்தினர், "என் மகன் தொழில் தொடங்க வேண்டும், உன் தந்தையிடம் பணம் வாங்கி வா," என்று வாய்மொழியாகப் பேசி நர்கிஸைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், கணவர் காஜா ரபிக்கும் நர்கிஸை அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இதுகுறித்து, ஜமாத்தாரிடம் நர்கிஸ் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் இருவரையும் அழைத்துபேசி, தனிகுடித்தனம் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, வேலூர் மாநகரில் தனி வீட்டில் குடியேறினர்.
இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் காஜா ரபிக், மனைவி நர்கிஸை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால், நர்கிஸுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நர்கிஸ், நேற்று ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில், "எனது திருமணத்திற்கு பெற்றோர் 30 பவுன் நகை, பைக் வாங்க ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம், மூன்று லட்சம் மதிப்பில் சீர்வரிசை, 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், மற்றும் திருமண செலவுக்கு அறுபது லட்சம் ரூபாய் கொடுத்தனர். இருப்பினும், நான் குறைவான நகை அணிந்து வந்ததாகக் கூறி, கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமை படுத்தினர். இதுகுறித்து என் பெற்றோரிடம் தெரிவித்தேன். டிசம்பர் மாதம் இரு குடும்பத்தினரும் பேசி சமரசம் செய்தனர்.
ஆனால், சில நாட்களிலேயே என் கணவர் மீண்டும் பத்து லட்சம் ரூபாய் பணம் மற்றும் எனது பெற்றோர் வசிக்கும் வீட்டை அவரது பெயருக்கு மாற்றி எழுதி வைக்குமாறு கேட்டு என்னைத் துன்புறுத்தினார். என் மாமனார் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதால், என்னையும், கணவரையும் வேலூர் சத்துவாச்சாரியில் தனிக்குடித்தனம் வைத்தனர். அதன்பிறகும், என்னை அடித்து துன்புறுத்டி வந்தார்.
இது தொடர்பாக ஜூலை 3-ம் தேதி என்னிடம் பிரச்சனை செய்துவிட்டு எனது கணவர் மாடிக்குச் சென்றுவிட்டார். நானும் அவரிடம் மன்னிப்பு கேட்பதற்காக மாடிக்குச் சென்றேன். அப்போது, அவரது தந்தையிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த என் கணவர், திடீரென மொட்டை மாடியில் இருந்து என்னை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்தார். இதில், எனக்கு இடுப்பு மற்றும் இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, நகர முடியாமல் வலியால் துடித்துகொண்டிருந்தேன். ஆனால், அப்போதும் கூட அவர் கண்டுகொள்லவே இல்லை. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை தனியார் மருத்துவமனையில் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். கணவர் உட்பட யாரும் என்னை வந்து பார்க்கவில்லை. கூடுதல் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து, கொலை செய்ய முயற்சித்த கணவர், மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அண்மையில், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய மதுரை காவலரின் செயல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருவண்ணாமலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை மாடியில் இருந்து கணவர் தள்ளிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.