நம் நாட்டில் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தபோதிலும் நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் இருக்கிறோம். இதனை உலக நாடுகள் ஆச்சர்யத்தோடு பார்ப்பது மட்டுமல்லாமல், முன்னுதாரணமாகவும் எடுத்துக்கொள்கின்றன. இருப்பினும் சில நபர்கள் சாதிய அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் செய்யும் சில குற்றங்கள் அல்லது வன்முறைகள் இன்னும் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை.

Advertisment

அதன் அடிப்படையில், புர்கா அணியாத காரணத்தால் ஒரு நபர் தன் மனைவி மற்றும் மகள்களை கொன்று புதைத்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரூக். இவருக்கு தாஹிரா (35) என்ற பெண்ணுடன் திருமணமாகி ஷரீன் (14) மற்றும் அஃப்ரீன் (6) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு வாரமாக மனைவி மற்றும் மகள்கள் காணாமல் போனதையடுத்து, பாரூக் அதைப் பற்றி எதுவும் கவலை கொள்ளாமல் இருந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்ட போது, தனது மனைவி மற்றும் குழந்தைகள் தன்னுடைய மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டதாக பாரூக் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் மூவரும் அந்த வீட்டிற்குச் செல்லவில்லை என்பதை அக்கம்பக்கத்தினர் அறிந்துள்ளனர்.

Advertisment

இதில் சந்தேகமடைந்த கிராமத்தினர், இது சம்பந்தமாக காவல்துறையில் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறை, முதலாவதாக பாரூக்கை விசாரணை செய்தது. அப்போது அவர் கூறிய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில், பண விவகாரம் தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பாரூக் மீது கோபமடைந்த தாஹிரா தனது இரு மகள்களை அழைத்து கொண்டு, தன் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது தாஹிரா புர்கா அணியாமல் வெளியே சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

புர்கா அணியாமல் வெளியே சென்றதால் தன்னுடைய கௌரவம் கெட்டுவிட்டதாகக் கருதிய பாருக், ஒரு மாதத்திற்குப் பிறகு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும், தனது இரு மகள்களையும் கொலை செய்து அவர்களை தன் வீட்டிலேயே புதைத்துள்ளார் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாரூக்கை கைது செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment