காஞ்சிபுரம் மாவட்டம், ஒரக்கடம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நந்தகுமார் (28) மற்றும் ஷாலினி (23). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவர் நந்தகுமாருக்கும் மனைவி ஷாலினிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், கடந்த 25-ம் தேதி குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, தகராறு ஒரு கட்டத்தில் முற்றி, கைகலப்பாகவும் மாறியுள்ளது. இருப்பினும், ஆத்திரம் தணியாத நந்தகுமார், மனைவி ஷாலினியை கம்பியால் தாக்கியுள்ளார். இதை அறிந்த ஷாலினியின் தந்தை, மகளை நேரில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு ஷாலினியின் உடல்நிலை மோசமாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஷாலினியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாலினி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே கணவர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஷாலினி புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அதை ஒரக்கடம் போலீசார் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். அதைத் தொடர்ந்து, நந்தகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.