Advertisment

வரதட்சணை கொடுமை; மனைவியின் கதையை முடித்த இரண்டாவது கணவர்!

4

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் உள்ள பத்ரகா கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிகா. இவருக்கு திருமணமாகி, முதல் கணவர் உயிரிழந்தார். அதன் பிறகு, தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவரை மோனிகா இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அசோக்கும் மோனிகாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisment

இதற்கிடையே, வரதட்சணை கேட்டு அசோக்கும், அவரது சகோதரர் சுனிலும் மோனிகாவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். மேலும், கணவர் தினந்தோறும் மோனிகாவை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இந்நிலையில், இந்தத் தம்பதியருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்தது. இந்தச் சூழலில், மோனிகா திடீரென உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு அசோக் வீட்டிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற மோனிகாவின் குடும்பத்தினருக்கும், அசோக் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.

Advertisment

இதற்கிடையே, மகள் மோனிகாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. உடனடியாகக் காவல் நிலையத்தை நாடிய மோனிகாவின் குடும்பத்தினர், "எனது மகளை அசோக் அடித்து கொலை செய்துள்ளார்" என்று புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மோனிகாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மோனிகாவின் ஒரு மாதக் குழந்தை நடுச் சாலையில் வீசப்பட்டிருந்த வீடியோ வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சாலையில் கிடந்த அந்த ஒரு மாதக் குழந்தையை, அவ்வழியாகச் சென்றவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, அங்கு வந்த ஒரு நபர் குழந்தையை மீட்டு எடுத்துச் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

இதற்கிடையே, மோனிகாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், அவர் இயற்கையாக மரணமடையவில்லை, மாறாக கொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோனிகாவின் வயிற்றில் வேகமாக உதைத்ததால், அவரது மண்ணீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், மோனிகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய மோனிகாவின் சகோதரர், "மோனிகாவை அசோக்கும் அவரது சகோதரரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். தற்போது அடித்து கொலை செய்துள்ளனர். மோனிகா உயிரிழந்த செய்தியைக் கேட்டு அங்கு சென்றபோது, எங்களது குடும்பத்தை இழிவாகப் பேசி தாக்கினர். மேலும், ஒரு மாதக் குழந்தையான எங்களது மருமகனை சாலையில் தூக்கி வீசியுள்ளனர்," என்று வேதனையுடன் தெரிவித்தார்.

வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொலை செய்ததோடு, ஒரு மாதக் குழந்தையை சாலையில் தூக்கி வீசிய தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband and wife police dowry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe