தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவில், பெரியாம்பட்டி அருகே உள்ளது பூநதனஅள்ளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சந்திரன். 62 வயதான இவர், ஈச்ச மரத்தில் குச்சிகள் எடுத்து துடைப்பம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, சந்திரனுக்கும் அவரது சொந்த அக்காவின் மகளான காளியம்மாள் (50) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு, 5 ஆண்டுகள் கழித்து, காளியம்மாளின் உடன் பிறந்த தங்கை கோவிந்தம்மாளை (45) இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி காளியம்மாளுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, சென்றுவிட்டனர். அதேபோல், இரண்டாவது மனைவி கோவிந்தம்மாளுக்கு ஒரு மகன் மட்டும் உள்ளார். அவர், போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், 25 ஆண்டு காலம் இரண்டாவது மனைவி கோவிந்தம்மாளுடன் வாழ்ந்து வந்த சந்திரனுக்கு, திடீரென அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கோவிந்தம்மாளுக்கும், அவரது தங்கையின் கணவர், லாரி ஓட்டுநர் முனிராஜ், ஒரு வழக்கறிஞர், வேலைக்குச் செல்லும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஊழியர் ஆகியோருடன் தொடர்பு இருப்பதாக சந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், இதன் காரணமாக இரண்டாவது மனைவி கோவிந்தம்மாளுடன் சந்திரன் அடிக்கடி சண்டையிட்டு, தகராறு செய்து வந்தார்.
இதைத் தொடர்ந்து, மனைவி வெளியே சென்ற பிறகு, அவரது செல்போனை எடுத்து, யாருக்கெல்லாம் தொலைபேசி அழைப்பு செய்துள்ளார் என்று பார்ப்பதும், அவ்வப்போது அவர் செல்லும் இடங்களை மறைந்திருந்து நோட்டமிடுவதுமாக சந்திரனின் சந்தேகம் உச்சத்திற்குச் சென்றது. இப்படி நாட்கள் செல்லச் செல்ல, அவரது சந்தேகம் வலுத்ததே தவிர, தீர்ந்தபாடில்லை. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி, சந்திரன் மனைவி கோவிந்தம்மாளிடம், "வா, ஈச்சத் துடைப்பம் எடுக்கப் போகலாம்," என்று கூறி, போச்சம்பள்ளி அருகே உள்ள புங்கம்பட்டிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். பின்னர், அங்கு கருவேப்பிலை கொட்டாய் என்ற இடத்தில் ஈச்ச ஓலைகளை அறுத்து, துடைப்பம் செய்யும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர், காலை 11 மணி அளவில் இருவரும் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, சந்திரனுக்கு சந்தேகம் என்ற பேய் தொற்றி, மனைவியிடம் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சந்திரன், துடைப்பம் கட்டும் கயிற்றால் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின்னர், உடல் மீது ஓலைகளைப் போட்டு மறைத்து வைத்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, டாஸ்மாக்கில் மது அருந்தியுள்ளார். பின்னர், ஒரு கடையில் பூச்சி மருந்து வாங்கிக் கொண்டு, சந்திரன் தனது வீட்டிற்குச் சென்றார்.
வீட்டில் இருந்த முதல் மனைவி காளியம்மாளிடம், "நான் உனது தங்கையைக் கோபத்தில் கொன்றுவிட்டேன்," என்று கூறி, கையில் இருந்த மருந்தைக் குடித்துவிட்டு, அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காளியம்மாள், கணவர் சந்திரனைப் பின்தொடர்ந்து சென்றார். பின்னர், வழியில் மயங்கிக் கிடந்த சந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து காரிமங்கலம் காவல்துறையினரிடம் காளியம்மாள் தெரிவித்ததை அடுத்து, போச்சம்பள்ளி, பாரூர், நாகரசம்பட்டி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், அந்தந்தப் பகுதி காவல்துறையினர் யாரேனும் கொலை செய்யப்பட்டுள்ளனரா எனத் தேடி வந்தனர்.
மதியம் ஒரு மணி முதல் தொடர்ந்து சடலத்தைத் தேடி வந்த நிலையில், இரவு 10 மணி அளவில், மருத்துவமனையில் மயங்கி இருந்த சந்திரன் லேசாகக் கண் விழித்து, சம்பவம் நடந்த இடத்தைக் கூறியுள்ளார். இதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பாரூர் காவல்துறையினர், அங்கு ஓலைகளுக்குள் மறைத்து வைத்திருந்த கோவிந்தம்மாளின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதும், அவரைக் கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.