திசையன்விளையைச் சேர்ந்த உருமங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் 37 வயதான முத்துக்குமார். மினி பஸ் ஓட்டுநரான இவருக்கு சரஸ்வதி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல் திருமணத்தை மறைத்து, திசையன்விளையில் மருந்தகத்தில் வேலை பார்த்து வந்தவர் 30 வயதான ஜாய்ஸ் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் உடன்குடி தேரியூர் ஆண்டிவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஜாய்ஸுக்கு மருந்தக ஊழியரான ஒருவருடன் இருந்த நட்பின் காரணமாக அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகமடைந்த முத்துக்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவதுடன், அவரது உடலில் அடிவயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாய்ஸுக்கு மொட்டையும் அடித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி அதிகாலையில் தலையில் காயத்துடன் மயங்கிய நிலையில் ஜாய்ஸ் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜாய்ஸ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், தலையில் பலத்த வெட்டுக் காயமும், உடலில் ஆங்காங்கே சூடு வைத்த தடயங்களும் இருந்ததால், இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. விரைந்து வந்த போலீசார் ஜாய்ஸின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவரது உடலை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், திருமணமாகி 6 ஆண்டுகளாக ஆவதால், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், ஜாய்ஸின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். ஜாய்ஸின் இறப்பு குறித்து முத்துக்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முதலில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக நாடகமாடிய  அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், “காதல் திருமணம் செய்து எங்களது வாழ்க்கை சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக என் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவளிடம் நான் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 29ஆம் தேதி இரவும் எங்கள் இருவருக்குள்ளும் சண்டை நடந்தது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கழுத்தை நெரித்தேன். பூரிக்கட்டையாலும் இரும்புக் கம்பியாலும் தலையில் தாக்கினேன். இதில் அவளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தாள். அவள் மயக்கம் தெளியாமல் இருந்ததால் பயந்து போன நான் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வரவழைத்தேன். அந்த ஆம்புலன்ஸில் மனைவியை ஏற்றிக்கொண்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினம் போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு காதல் மனைவியை மொட்டையடித்து சித்திரவதை செய்து, கழுத்தை நெரித்து அடித்து கொன்றுவிட்டு, அந்தக் கொலையை மறைக்க 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி நாடகமாடிய மினி பஸ் ஓட்டுநர் போலீசில் சிக்கியுள்ள சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்  - எஸ்.மூர்த்தி