தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். 38 வயதான இவர், புகைப்படக் கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். வினோத்குமாருக்கும் நித்யா என்ற 35 வயது பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்களும், 5 வயதில் ஒரு மகனும் இருந்தனர்.
நிம்மதியாக இருந்த இவர்களுடைய வாழ்க்கையில், திடீரென புகுந்த ஒரு நபரால், அந்தக் குடும்பமே மொத்தமாக அழிந்த சம்பவம், அந்த ஊரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வினோத்குமாரின் மனைவியான நித்யாவுக்கு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறான பழக்கத்தால், நித்யா தனது கணவரையும், குழந்தைகளையும் மறந்து, காதலனே கதியென இருந்துள்ளார். நாளடைவில், இதைத் தெரிந்துகொண்ட வினோத்குமார், தன்னுடைய மனைவியைக் கண்டித்து, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், மனம் மாறாத மோகத்தில் இருந்த நித்யா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்தை உதறித் தள்ளிவிட்டு, காதலனுடன் ஓடிவிட்டார்.
காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார், தினந்தோறும் மது போதையிலேயே இருந்துள்ளார். காலப்போக்கில் மதுபோதைக்கு அடிமையான வினோத்குமார், குழந்தைகளை வெறுத்து, அவர்களை அடிக்கடி திட்டி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில், தந்தையின் கோபத்திற்கு ஆளாகி வந்துள்ளனர் அந்த மூன்று குழந்தைகளும். இந்தச் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியைச் சந்தித்து, மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு வினோத்குமார் அழைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போதும், நித்யா தன்னுடைய திருமணத்தை மீறிய உறவைக் கைவிட மறுத்து, “உன்னுடன் வரமாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார், கடந்த 9ம் தேதி மாலை, வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கிக் கொடுத்து, சாப்பிடுமாறு கூறியுள்ளார். அப்போது, குழந்தைகளும் தந்தை வாங்கிக் கொடுத்த பலகாரங்களை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், திடீரென கொடூரமாக மாறிய வினோத்குமார், தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல், தனது மூன்று குழந்தைகளையும் துடிக்கத் துடிக்கக் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மூன்று குழந்தைகளும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், ரத்தக் கறையுடன் அங்கிருந்து வெளியேறிய வினோத்குமார், மதுக்கூர் காவல் நிலையத்திற்குச் சென்று, தான் தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்ததாகக் கூறி சரணடைந்தார். அங்கு, வினோத்குமார் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், உடனடியாக மூன்று குழந்தைகளின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள், வினோத்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.