கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே புட்டேனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான சையது இனாமுல். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. பெண் வீட்டில் இருந்து, வரதட்சணையாக 340 கிராம் தங்க நகைகள், பைக் உள்ளிட்டவைகளை சையது இனாமுலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த சூழலில், கணவர் சையது இனாமுல், வீட்டின் படுக்கை அறையில் மனைவிக்கு தெரியாமல் ரகசிய கேமரா ஒன்றைப் பொருத்தியுள்ளார். அதில் தனது மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதையும், அவள் உடை மாற்றுவதையும் வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். பின்னர், ஒரு நாள் அந்த வீடியோக்களைத் தனது மனைவியிடம் காட்டிய சையது இனாமுல், “நான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும்; இல்லையென்றால் இதை வெளியிட்டுவிடுவேன்” என மிரட்டியுள்ளார். மேலும், “துபாயில் எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவனுடன் நீ தனிமையில் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்தமடைந்த சையது இனாமுல், அந்த வீடியோக்களை எல்லாம் துபாயில் இருக்கும் தனது நண்பனுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து மனைவிக்கு தெரிய வர, சையது இனாமுலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, “ஏற்கனவே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அதை மறைத்துதான் உன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளேன். 19 பெண்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. நான் சொல்வதை எல்லாம் கேட்டால் என்னுடன் வாழலாம்; இல்லையென்றால் விவாகரத்து கொடுத்துவிடுகிறேன்” என்று மிரட்டியிருக்கிறார். மேலும், இது தொடர்பாக அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சையது இனாமுலின் டார்ச்சர் தாங்க முடியாமல், கணவரின் உறவினரான அமீன் பேக் என்பவரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி அழுதுள்ளார். ஆனால், இதைப் பயன்படுத்திக் கொண்ட அமீன் பேக் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பெண்ணின் கணவருடன் சேர்ந்து கொண்டு, அமீனும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.
பொறுத்தது போதும் என்று நினைத்த அந்தப் பெண், புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி, கணவர் உள்பட 4 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தலைமறைவாக இருக்கும் கணவர் சையது இனாமுலையும் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பத்திய உறவில் இருக்கும் போது அதை வீடியோவாக எடுத்து, மனைவியை நண்பருடன் தனிமையில் இருக்கச் சொல்லி மிரட்டும் கணவரின் செயல், பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.