திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்தவர் சிவன்பாண்டி மகன் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவருக்கும் திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் பாலமுருகனுக்கும் ஸ்ரீபிரியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டையும் சில நேரங்களில் கைகலப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்தச் சூழலில் கணவர் பாலமுருகனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று மனைவி ஸ்ரீபிரியா முடிவெடுத்துள்ளார். அதன்படி பாலமுருகனைப் பிரிந்து கோவை வந்த அவர், காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் ஸ்ரீபிரியாவுக்கு பாலமுருகனின் உறவினரான இசக்கி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து ஸ்ரீபிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை இசக்கி கணவர் பாலமுருகனுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாலமுருகன் கோவைக்கு விரைந்து வந்துள்ளார். பின்னர் தனது மனைவி தங்கியிருந்த பெண்கள் விடுதிக்குச் சென்ற அவர், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஸ்ரீபிரியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

தனியார் மகளிர் விடுதி வளாகத்திலேயே மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, காவல்துறையினர் வரும் வரை கால் மேல் கால் போட்டு அங்கேயே உட்கார்ந்துள்ளார். மேலும் அதைப் புகைப்படமாக எடுத்து ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என்று வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீசார் பாலமுருகனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியைக் கொலை செய்துவிட்டு ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என்று ஸ்டேட்டஸ் வைத்த கணவரின் செயல் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.