மதுராந்தகம் அருகே உள்ள சிலவாடம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சரண். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான மதுமிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கிறது. இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காதலை கைவிட மனமில்லாத இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து இருவரும் மதுராந்தகம் பகுதியில் வீடு எடுத்து தங்கி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மதுமிதா அடிக்கடி செல்போனில் வேறு யாருடனோ பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த சரண், மனைவி மதுமிதாவை கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால் அதையும் மீறி மதுமிதா தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.

Advertisment

இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சரண், மதுமிதாவைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று “கோவிலுக்கு செல்லலாம், வா” என்று கூறி மதுமிதாவை ஆனந்தமங்கலம் கிராமத்திலுள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள மலைப்பகுதியைப் பார்ப்போம் என்று கூறி மனைவியை அழைத்துச் சென்ற சரண், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுமிதாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததைப் பார்த்த சரண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அந்தப் பகுதியில் மதுமிதா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுமிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்த போலீசார், சரணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதற்காகத் திருமணமான நான்கே மாதங்களில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொன்ற சம்பவம் மதுராந்தகம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுதியிருக்கிறது.