மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் மின்சாரம் இல்லை, சாலை வசதி வேண்டும், படிப்புக்கு உதவி வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துத் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஒருவர், தனது மனைவி இரவில் நாகினியாக மாறிவிடுகிறாள், எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று கூறி மாவட்ட ஆட்சியரையே அதிர வைத்திருக்கிறார். முதலில் இதையெல்லாம் நம்பாத அதிகாரிகள், அந்த நபர் போதையில் ஏதோ உளறுவதாக எண்ணியுள்ளனர். ஆனால், விடாபிடியாக நடந்தவற்றை ஆட்சியரிடம் எடுத்துரைத்ததும், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
சீதாப்பூர் மாவட்டம், லோதாசா கிராமத்தைச் சேர்ந்தவர் மெராஜ். இவருக்கு ராஜ்பூரைச் சேர்ந்த நசீமுன் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த இவர்களது வாழ்க்கையில், இரவு நேர சம்பவங்கள் பல வில்லங்கங்களை கொண்டுவந்து சேர்த்துள்ளன. இதுகுறித்துத் தான் தற்போது ஆட்சியரிடம் மெராஜ் புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், “எனது மனைவியைக் கட்டாயப்படுத்தி எனக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டனர். கல்யாணமான நாளிலிருந்தே இரவு நேரத்தில் நாகினியாகச் சீறிப் பாய்ந்து என்னைக் கடிக்க முயற்சித்து வருகிறார். தூங்கும்போது பாம்பைப் போன்றே ‘புஷ்... புஷ்...’ என்று சத்தமிடுகிறார். இப்படி பல முறை என்னைப் பயமுறுத்தி கொல்ல முயன்றிருக்கிறார். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன், ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை; அதனால் தான் உங்களிடம் வந்துள்ளேன். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறியிருக்கிறார்.
இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அபிஷேக் ஆனந்த், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து ஊருக்குள் விசாரித்தபோது, மெராஜின் மனைவி நசீமுன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதை மறைத்துத் திருமணம் செய்துவைத்ததாகவும் கூறியுள்ளனர். இதனிடையே, தனது மனைவியின் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து, அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று மெராஜ் நினைத்துள்ளார். அதற்காக சில பேய் ஓட்டும் இடங்களுக்கும் தனது மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனாலும், இரவு நேர நாகினி ஆட்டம் சரியாகவில்லையாம். அதேசமயம், இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பெண்ணின் குடும்பம், மெராஜ் வேண்டுமென்றே நன்றாக இருக்கும் தனது மகளை மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சித்தரிக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இப்படி மாறிமாறி இரு தரப்பும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் நிலையில், யார் சொல்வது உண்மை என்று போலீஸ் உரிய விசாரணை நடத்தி வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.