மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசிக்கும் அமித் யாதவ் - கியார்சி தம்பதியினர், ஆகஸ்ட் 9 அன்று ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி மத்தியப் பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நாக்பூர் - ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத லாரி ஒன்று அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கியார்சி தடுமாறி கீழே விழ, லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. சம்பவ இடம் வனப்பகுதியில் என்பதால், வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது. அவ்வழியாக வந்த சில வாகன ஓட்டிகளிடம் அமித் யாதவ் உதவி கோரியபோதிலும், யாரும் உதவ முன்வரவில்லை. இதனால் விரக்தியடைந்த அமித், உயிரிழந்த மனைவியின் உடலை தனது இருசக்கர வாகனத்தில் கட்டி, வீட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றார்.
இதற்கிடையே, நாக்பூர் - ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது, அங்கு யாரையும் காணவில்லை. ஆனால், சாலையில் ரத்தக் கறைகள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார், சாலையைப் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது, அமித் யாதவ் தனது இருசக்கர வாகனத்தில் மனைவியின் உடலை கட்டி எடுத்துச் செல்வதை கண்டனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வாகனத்தை நிறுத்துமாறு கூறினர். ஆனால், அமித் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கிறார். இருப்பினும், போலீசார் பின்தொடர்ந்து அவரைப் பிடித்தனர். பின்னர், அவரிடம் விசாரித்தபோது நடந்த சம்பவம் தெரியவந்தது. அதன்பிறகு கியார்சியின் உடலை மீட்ட போலீசார், அதனை நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சாலை விபத்தில் கண்முன்னே மனைவி உயிரிழந்த நிலையில், உதவி செய்ய யாருமின்றி, மனைவியின் உடலை இருசக்கர வாகனத்தில் கட்டி எடுத்து வந்த அமித் யாதவின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரை உருக்கமடையச் செய்துள்ளது.