திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி இந்திராணி உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி,  அவர்களது கணவர் வீட்டில் வசிக்கின்றனர். மகன் நேதாஜி, தனது பெற்றோரை கவனித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், கடந்த மாதம் நேதாஜி, பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கராஜின் மனைவி சாந்தியிடம் வீட்டு வேலைக்காக ஒரு ஸ்டூல்கேட்டு வாங்கியுள்ளார். இதை தவறாகப் புரிந்து கொண்ட தங்கராஜ், "என் மனைவியிடம் பேசக் கூடாது" என நேதாஜியை மிரட்டியிருக்கிறார். தொடர்ந்து, கடந்த மாதம் 9-ம் தேதி, தங்கராஜ் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களுடன் நேதாஜியின் வீட்டிற்கு சென்று, அவரை மிரட்டியதோடு, "என் மனைவியிடம் பேசுவாயா?" என்று கூறி, தலை கால் ஆகியவற்றை அடித்து உடைத்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த நேதாஜி, தற்போது திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகனை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சுப்பிரமணி, சிகிச்சையில் உள்ள மகன் நேதாஜியை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.