உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ். இவரது மனைவி சுனிதா. இந்தத் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில், ஹன்ஸ்ராஜ் வேலைத் தேடி தனது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு புலம்பெயர்ந்தார். அங்கு கிஷன்கர் பாஸ் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்த அவர், ஆதர்ஷ் காலனியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று, வாடகை வீட்டின் உரிமையாளரான முதிய பெண்மணி மொட்டை மாடிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த நீல நிற டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அவர், காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்திருக்கிறார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், டிரம்மை ஆய்வு செய்தபோது, அதில் ஹன்ஸ்ராஜ் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். மேலும், அவரை யாரோ கொலை செய்து, டிரம்மில் அடைத்து, உப்புத் தூவி, கல்லை மேலே வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஹன்ஸ்ராஜின் மனைவி சுனிதாவும், அவரது மூன்று குழந்தைகளும் காணாமல் போயிருந்தனர். இது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அதே சமயம், வீட்டு உரிமையாளரின் மகன் ஜிதேந்திரா ஷர்மாவும் மாயமாகியிருந்தது சந்தேக வளையத்தைப் பெரிதாக்கியது. ஹன்ஸ்ராஜின் மரணத்திற்கும், அவர்கள் மாயமானதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், வீட்டு உரிமையாளரின் மகன் ஜிதேந்திர ஷர்மாவிற்கும், சுனிதாவிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது தெரியவந்தது. இதை அறிந்த ஹன்ஸ்ராஜ், தனது மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாகவே, இருவரும் சேர்ந்து ஹன்ஸ்ராஜைக் கொலை செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள மற்றொரு செங்கல் சூளையில் மூன்று குழந்தைகளுடன் சுனிதாவும், அவரது காதலர் ஜிதேந்திர ஷர்மாவும் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் சுனிதாவையும், ஜிதேந்திர ஷர்மாவையும் கைது செய்தனர்.
இந்தச் சூழலில், ஹன்ஸ்ராஜின் 8 வயது மகன் வழக்கின் முக்கிய சாட்சியாக மாறியுள்ளார். சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், “சம்பவத்தன்று(ஆகஸ்ட் 15) இரவு, எனது அப்பா, அம்மா மற்றும் மாமா (ஜிதேந்திர ஷர்மா) ஆகிய மூவரும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது, எனது அம்மா ஒரு பெக் மட்டுமே அருந்தியிருந்தார். ஆனால், மாமாவும், அப்பாவும் அதிக அளவில் மது அருந்தினர். பின்னர், திடீரென எனது அப்பா, என்னுடைய அம்மாவை அடிக்கத் தொடங்கினார். அதனை மாமா தடுக்க முயன்றபோது, என் அப்பா, ‘நீ அவளைக் காப்பாற்றினால், உன்னையும் சேர்த்து கொலை செய்துவிடுவேன்’ என்று கூறினார். அதன்பின், மாமா எனது அப்பாவைத் தாக்கினார். அந்த நேரத்தில், என் அம்மா என்னை உறங்கச் செல்லுமாறு கூறினார். அங்கிருந்து நானும் உறங்கச் சென்றுவிட்டேன். பிறகு, கண் விழித்துப் பார்த்தபோது, எனது அப்பா அசையாமல் படுத்திருந்தார். அருகே மாமாவும், அம்மாவும் நின்றிருந்தனர். பின்னர், சமையலறையில் இருந்த டிரம்மில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அதற்குள் அப்பாவின் உடலை வைத்தனர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று மாமாவிடம் கேட்டேன். அதற்கு, ‘உன் அப்பா இறந்துவிட்டார்’ என்று கூறினார்,” என அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் சிறுவன், தனது தந்தை ஹன்ஸ்ராஜ் அடிக்கடி தனது தாயைத் தாக்கியதாகவும், சில சமயங்களில் பீடியால் சூடு வைத்ததாகவும், சம்பவத்தன்று தனது அப்பா கோபத்தில் தனது கழுத்தைக் கத்தியால் அறுக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரிகள், சம்பவத்தன்று, மதுபோதையில் இருந்த ஹன்ஸ்ராஜை, அவரது மனைவியும், காதலர் ஜிதேந்திர ஷர்மாவும் சேர்ந்து தலையணையால் முகத்தில் அழுத்தி, மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாகக் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மூன்று பிள்ளைகளும் ஹன்ஸ்ராஜின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில், ஒரு மனைவி தனது கணவனை 15 துண்டுகளாக வெட்டி, நீல நிற டிரம்மில் அடைத்து வைத்துவிட்டு, காதலனுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக, நீல நிற டிரம்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆதார் போன்ற அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச வணிகர்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது. மேலும், நில நிற டிரம்முடன், திருமணத்தை மீறிய உறவை தொடர்பு படுத்தி பல மீம்ஸ்களும், வீடியோக்களும் இணையத்தை வைரல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்திருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.