சில வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது மீண்டும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் நல்லமன்னார்கோட்டை பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிவுபெற்று வர்ணம் தீட்டுவதற்கு தயாராக இருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் சில மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை வீசியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 'மூவேந்தர் புலிப்படை' என்ற அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், ''திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை ஊராட்சி கிழக்குத் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் சில மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை வீசி தொட்டி பயன்பாட்டுக்கு வருகை தடுக்க நினைக்கிறார்கள். ஏற்கனவே இதுபோன்ற ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் கேட்டுக்கொள்கிறோம். புரளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிளீச்சிங் பவுடரை மட்டும் தூவி விட்டு சென்றுவிட்டனர்'' என தெரிவித்தனர்.