அரசு பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி என்ற கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் காரியாங்குடி, நெம்மேலி, இலங்கச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டு நிலையில், காலை உணவு திட்டத்தின் கீழ் சமைப்பதற்காக சமையலர்கள் பள்ளி சமையலறைக்குள் வந்துள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொருக்கப்பட்டும், மளிகை பொருட்கள் சிதறியும் கிடந்துள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் குடிநீர் அருந்தும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு அதில் மனிதக் கழிவு கொட்டப்பட்டிருந்தது. பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டிருந்தன.

இதனை கண்ட அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள், உடனடியாக இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்ததோடு ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்தினர். மேலும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் இருந்த மர்ம நபர்கள் பள்ளிக்கு வந்து சிக்கன் சமைத்துவிட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.