கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தானபுரம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. அனைத்து பொதுமக்களுக்கான இந்த கோவிலை ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே நிர்வகித்து வருவதாகவும். இக்கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இதனை இந்து சமய அறநிலைத்துறை கையகப்படுத்தி முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்து அறநிலையத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisment

இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த மாதம் 19ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆபத்தானப்புரம் பச்சைவாழி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சென்ற காரை வழிமறித்து அப்பகுதியைச் சேர்ந்த வடலூர் நகர அதிமுக செயலாளர் பாபு மற்றும் அவரது கூட்டாளி நடராஜன் உள்ளிட்டவர்கள் வழிமறித்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

Advertisment

இதுகுறித்து கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சந்திரன் அளித்த புகாரின் பேரில் அதிமுக வடலூர் நகர செயலாளர் பாபு அவரது கூட்டாளியான பூசாரி குப்பம் பகுதியை சேர்ந்த நடராஜன் மற்றும் சிலர் மீது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக நகர செயலாளராக உள்ளவர் அரசு அதிகாரிகளிடம் ஒறுமையில் பேசி அவர்களின் காரை வழிமறித்து மிரட்டல் விடுத்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.