Advertisment

3 மாதத்தில் 11 சம்பவங்கள்! சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் திருடன் பாலக்காட்டில் சிக்கியது எப்படி?

புதுப்பிக்கப்பட்டது
2

புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் அறந்தாங்கி. தினந்தோறும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்வதால், அறந்தாங்கியை வணிகம் செய்ய சரியான இடமாக தொழில் செய்வோர் பார்க்கின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக அங்கு நடக்கும் திருட்டு சம்பவங்கள், அறந்தாங்கிக்கு ஏன் தொழில் செய்ய வந்தோம்..? என்று நினைக்கும் அளவிற்கு வணிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பைக் திருட்டு தொடங்கி வீடு, கோவில், கடைகள் என திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

Advertisment

இது ஒரு புறம் இருக்க, திருட்டைத் தடுக்க, கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துங்கள் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஒருவேளை திருட்டு சம்பவம் நடந்தால், சிசிடிவி உதவியுடன் குற்றவாளியைப் பிடிக்கலாம் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் வாங்கி பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அதற்குப் பிறகும் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதாக வணிகர்களும், கடை உரிமையாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், திருட்டு சம்பவம் நடந்தவுடன் புகார் வாங்கிக்கொண்டு விசாரணைக்கு வரும் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைப் பெற்றுக்கொண்டு செல்வதோடு சரி, இதுவரை எந்தத் திருடனையும் பிடிக்கவில்லை என்று வணிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், நகரின் மையப்பகுதியில், தாலுகா அலுவலகம் அருகே உள்ள பிரதான சாலையில், கதிரேசன் என்பவர் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கான தையல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல், கடந்த 15ஆம் தேதி காலை கதிரேசன் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி காவல்துறையினர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில், அதிகாலை 4:12 மணிக்கு ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்துக்கொண்டு, டிராவல் பேக்குடன், டிப் டாப் உடை, காலில் ஷூ, கையில் மருத்துவ கையுறை அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைவது பதிவாகியிருந்தது. பின்னர், உள்ளே இருந்த மேஜையின் பூட்டை, தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த திருப்புளி உள்ளிட்ட கருவிகள் மூலம் திறந்து, அதில் இருந்த 1.65 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, பின்னர் வந்த வழியே சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் சுமார் 9 நிமிடங்களில் கடைக்குள் புகுந்து, விரைவாக வேலையை முடித்துவிட்டு, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோல், அருகே இருந்த மருந்தகக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்களுக்கு அங்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், கதிரேசன் கடையில் நடந்த திருட்டுக்கு பயன்படுத்திய மருத்துவ கையுறை அங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அறந்தாங்கி நகரில் தொடர் திருட்டு நடந்தும் திருடர்கள் பிடிபடவில்லை. அதாவது, அறந்தாங்கி நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ரோட்டில் 3 கடைகளை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டுப் போனது. உடனே அறந்தாங்கி காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளுடன் புகார் கொடுத்தோம்; ஒன்றும் பலனில்லை. அடுத்து இதே நகரில் பகலில் 3 கடைகளில் பூட்டு உடைத்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் திருட்டுப் போனது. அப்பவும் சிசிடிவி பதிவுகளுடன் தான் புகார் கொடுத்தோம்; இதுவரை ஒரு திருடனையும் பிடிக்கவில்லை. 15 நாட்களுக்கு முன்பு ஒரு பழைய இரும்புக் கடையில் சுமார் 300 கிலோ காப்பர் காணாமல் போனது. போன வாரம் அக்னிப் பஜாரில் 2 கடைகளில் ரூ.15 ஆயிரம் வரை திருட்டுப் போயுள்ளது. இப்போது, நகரின் மையப்பகுதியில் 2 கடைகளில் பூட்டு உடைத்து ஒரு கடையில் ரூ.1.65 லட்சம் பணம் திருட்டுப் போயுள்ளது. ஆனால் அறந்தாங்கி போலீசார் கண்டுகொள்ளவில்லை என்ற வியாபாரிகளின் குமுறல்கள், சிசிடிவி பதிவுகளுடன் நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியானது பெரும் பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், 23 ஆம் தேதி காலை அறந்தாங்கி காவல் சரகம் ஆவணத்தான்கோட்டை அருகில் உள்ள மாளிகைபுஞ்சை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த 5 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, தாலி, மணி, காசுகளையும் வெள்ளி, வெண்கலக் குத்துவிளக்குகள், ஆம்பலையர் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது போலத் தொடரும் திருட்டுகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்பதும் ஊடகங்களில் செய்திகளாக வெளியான நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அறந்தாங்கி தொடர் திருட்டுச் சம்பவங்கள் குறித்து விபரங்கள் கேட்டறிந்தார்.

பின்னர் உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து சிசிடிவியில் சிக்கியுள்ள திருடர்களைப் பிடிக்க உத்தரவிட்டார். லட்சுமி ஸ்டோர்ஸ் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த தனிப்படை போலீசார் அதில் பணத்தைத் திருடும் நபரின் படத்தை எடுத்து மாநில அளவில் இயங்கும் கிரைம் டீம் போலீசாருக்கு அனுப்பி விபரம் கேட்கத் திருப்பூர் மாவட்ட கிரைம் டீம் போலீசார் இந்தப் படத்தில் உள்ள நபர் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ். திருப்பூரில் அவனது குழந்தைகள் உள்ளன. அதனால் இங்கு வந்து தங்கிச் செல்வான் என்று கூறியுள்ளனர். உடனே திருப்பூர் சென்றது தனிப்படை. ஆனால் திருடன் சுரேஷ் அங்கு இல்லை.

இதையடுத்து அவனது செல்போன் எண்ணை வாங்கி இருப்பிடம் பற்றி தனிப்படை போலீசார் ஆராயத் தொடங்கினர். அதில் சுரேஷ் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் சுரேஷைக் கைது செய்து அழைத்து வந்து அறந்தாங்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், “சின்ன வயதிலேயே திருடத் தொடங்கிட்டேன். எங்கே போனாலும் பஸ்ஸில் தான் போவேன். எனக்குத் திருமணமாகிக் கொஞ்ச நாள் திருடப் போகவில்லை. அப்புறம் தொடர்ந்து திருட ஆரம்பித்துவிட்டேன். முதல் மனைவி இறந்துடுச்சி. அப்புறம் 2வது திருமணம் செஞ்சேன். தற்போது 2வது மனைவியும் இறந்துட்டா. குழந்தைகளைத் திருப்பூரில் உள்ள என் உறவினர்கள் வீட்டில் வளர்க்கச் சொல்லிட்டேன். என் மேல தமிழ்நாட்டில் 30க்கு மேல் திருட்டு வழக்குகள் இருக்கு. பிடிபடும் போது கோர்ட்டுக்குப் போறது தான். அதன் பிறகு கோர்ட்டுக்குப் போறதில்லை. அதனால பல ஊர்களில் வாரண்ட் இருக்கு. டிராவல் பேக்ல என்னோட துணிமணிகள், திருப்புளிகளோட கிளம்புவேன். வரும் பஸ்ஸில் ஏறுவேன். கடைசியா போற ஊரில் இறங்குவேன். சில கடைகளைப் பூட்டை உடைத்துப் பணத்தை எடுத்துக்கும். அடுத்து வரும் பஸ்ஸில் ஏறி ஏதாவது ஊருக்குப் போயிடுவேன். ஒரே ஊரில் அடுத்தடுத்த நாள் தங்கி இருந்து திருடினால் சிக்கிடுவோம்னு 200, 300 கி.மீ. கடந்து போயிருவேன். அது போல தான் அறந்தாங்கியில் திருடிக்கிட்டு பாலக்காடு வந்தேன். இங்கே சில இடங்களைப் பார்த்துத் திருடத் திட்டமிட்டிருந்தேன். அதற்குள் உங்களிடம் சிக்கிட்டேன்” என்று கூறியுள்ளார்.புதுக்கோட்டை போலீசார் பாலக்காடு திருட்டில் இருந்து தப்பியது. இந்த ஒரு திருடனைப் பிடித்தது போல மற்ற 10 சம்பவங்களிலும் திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்கிறார்கள் வியாபாரிகள்.

புதுக்கோட்டை போலீசாரின்  இந்த ஒரு திருடனை பிடித்தது போல மற்ற 10 சம்பவங்களிலும் திருடர்களை பிடிக்க வேண்டும் என்கிறார்கள் வியாபாரிகள்.

Theft police Pudukottai
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe