தமிழ்நாடு, புதுவை, கேரளா சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று வேட்புமனு விநியோகம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக விருப்ப மனு விநியோகத்தைத் தொடங்கிவைத்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். 

Advertisment

அப்போது அவர், ‘’கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவின் படி,  விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. இன்றைய எழுச்சியை பார்க்கும் பொழுதே, அதிமுக இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது உறுதியாகத் தெரிகிறது" என்றார். 

Advertisment

அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு ஜெயகுமார் பதிலளித்தார்.

கேள்வி : 'எஞ்சின் இல்லாத கார் அதிமுக'  என்று உதயநிதி விமர்சனம் செய்திருக்கிறாரே...?

பதில் : எங்கள் கட்சி அட்வான்ஸ்டு ஆகி விட்டது. அவர் இன்னும் அந்தக் காலத்திலேயே, அதாவது நீராவி எஞ்சின், கரி எஞ்சின் காலத்திலேயே இருக்கிறார். இப்போது புல்லட் ரயில் வந்து விட்டது. இன்னும் கூட்ஸ் ரயில் காலத்தில் இருக்கிறார். உதயநிதி இன்னும் அப்டேட் ஆகவே இல்லை. இன்று எல்லாமே மின்சார தொழில் நுட்பத்தில் மிகவேகமாக செல்வது போன்று அதிமுக மிக வேகமாகச் செல்கிறது. 

Advertisment

கேள்வி : அதிமுக கூட்டணியில் பாஜக இந்த முறை 60 தொகுதிகளுக்கு மேல் கேட்பதாகக் கூறப்படுகிறதே?

பதில் : எல்லா கட்சியும் கூடுதல் தொகுதிகளை கேட்கத்தான் செய்வார்கள். அதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் யாருக்கு என்ன பலம் என்று எங்கள் கட்சி முடிவு செய்யும். இதில் நான் எதுவும் சொல்ல முடியாது. 

கேள்வி: நீங்கள் விருப்ப மனு வாங்கிவிட்டீர்களா..?  ராயபுரம் தொகுதியில் தான் போட்டியிடுவீர்களா...?

பதில் : நிச்சயமாக. 25 ஆண்டுகளாக ராயபுரத்தில் தான் போட்டியிடுகிறேன்.  ராயபுரம் தொகுதி மக்கள், எனக்கு 25 ஆண்டுகள் வெற்றியைக் கொடுத்தவர்கள். களத்தில் ஒரு மாவீரனுக்கு, விளையாட்டு வீரனுக்கு, வெற்றி தோல்வி பற்றி கவலை இல்லை. ஆனால் ராயபுரத்தில் எனக்கு இந்த முறை வெற்றி தான் முழுமையாக கிடைக்கும். ஜெயக்குமார் அந்த தொகுதிக்கு போகிறார், இந்த தொகுதிக்கு போகிறார் என்று சொல்லப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். 

கேள்வி : மயிலாப்பூர் தொகுதிக்கு போவதாகச் சொல்கிறார்களே…?

பதில்  : ராயபுரம் தொகுதி மக்களை விட்டு எந்த காலத்திலும் நான் விலகிச்செல்ல மாட்டேன்.கட்சி கட்டளையிடும் வரை! 

கேள்வி  : கட்சியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகப் பேசப்படுகிறதே..?

பதில் : அவை எல்லாம், கொள்கை சார்ந்த விஷயம்.. நான் முடிவு செய்ய முடியாத விஷயம். யார் யாரை சேர்க்க வேண்டும். யார் யாரை நீக்க வேண்டும் என்பது கட்சியும் பொதுச்செயலாளரும் முடிவு செய்யும் விஷயம். இதில் நான் இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல முடியாது.

கேள்வி ; முன்கூட்டியே அதிமுக விருப்பமனு வாங்குவதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறாரே..?

பதில் ; முன்கூட்டியே வாங்கினால் என்ன, பின்கூட்டி வாங்கினால் என்ன ? அவர்கள் ஆமையாக இருக்கலாம். ஆனால், நாங்கள் குதிரையாக இருப்போம். அதிமுக பற்றி அவருக்கு என்ன கவலை. அவர்தான் கரை வேட்டியே மாற்ற விட்டு சென்று விட்டார்.
புரட்சித்தலைவி ஜெயலலிதா இருந்தபோது ரகுபதி எப்படி பேசினார் என்பது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது, ஊரில் யார் குழந்தை பெற்றாலும் பெண் குழந்தையாக இருந்தால் உங்கள் பெயரை தான் வைப்பேன் என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டுச் சென்றவர்தான் ரகுபதி. இன்று ஸ்டாலினை வழிநடத்துபவர்கள் எல்லோருமே அண்ணா திமுகவிலிருந்து சென்றவர்கள் தான். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்று வேட்டி மாற்றிய ரகுபதிக்கு, எங்கள் இயக்கத்தை பற்றி சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை.